அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
திமுக மூத்த தலைவரும், அமைச்சருமான துரைமுருகன் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் துரைமுருகனுக்கு வயது மூப்பின் காரணமாக, அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. இதனால், அவர் மருத்துவமனை சென்று அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தான், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த அமைச்சர் துரைமுருகனுக்கு, திடீர் சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இதனால், அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அமைச்சர் துரைமுருகனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், உரிய சிகிச்சை வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துமவனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்த திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்துள்ளார். மேலும், அங்கிருந்த மருத்துவர்களிடம் அமைச்சர் துரைமுருகன் உடல் நிலை தொடர்பாகவும் கேட்டறிந்தார். தற்போது, சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, துரைமுருகன் உரிய சிகிச்சைக்குப் பெற்ற பிறகு வீடு திரும்புவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவின் பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் (வயது 87) 10 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போர் போராட்டத்தில் பங்கேற்றவர். தமிழ்நாட்டில் தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் துரைமுருகன் மட்டுமே அதிக முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றவர். சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால், மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு ‘பேரறிஞர் அண்ணா விருது’ வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.