இந்துக்களுக்கு வழிபாட்டு சுதந்திரம் இல்லை- எச்.ராஜா ஆவேசம்
தமிழகத்தில் இந்துக்களுக்கு ஆன்மீகம், மத சுதந்திரம் மற்றும் வழிபாட்டு சுதந்திரம் இல்லை என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தினார்.
காஞ்சிபுரத்தில் பஞ்சபூத தலங்களில் ஒன்றான ஸ்ரீ ஏலவார்குழலி உடனுறை ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா சாமி தரிசனம் செய்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கோயில் நகரம் காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோயில் 48 நாட்கள் மண்டல பூஜை நிறைவு பெற்றது. இதற்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு இடைஞ்சலாக இந்து சமய அறநிலையத்துறையே செயல்பட்டு வருகிறது. தமிழக அரசை பொருத்தவரை, டாஸ்மார்க் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இவை இரண்டு தான் தங்கச்சுரங்கம். இங்குதான் கொள்ளையடிக்க முடிகிறது.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த நான்கரை ஆண்டுகளாக இந்துக்களின் மத நம்பிக்கைகளை சிதைக்கும் செயல் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இந்து விரோத தீய சக்திகள் கூடிக் கொள்ளை அடிக்கிறார்கள். பிற மாநிலங்களில் உள்ள இந்து கோயில்களில் பக்தர்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் பற்றி அறிந்திருந்தும், சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் காத்துக் கிடப்பதில் என்ன தவறு? என்று அமைச்சர் சேகர்பாபு கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது?அறநிலையத்துறை அறம் கெட்ட துறையாக மாறிப்போனதற்கு இதுவே உதாரணம் ஆகும். எனவேதான், இந்த அறம் கெட்ட துறையை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என நான் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறேன்.
மேலும், பிற மத வழிபாட்டு தலங்களில் எந்த கட்டணமும் இல்லாதபோது, இந்து கோயில்களில் மட்டும் கட்டணம் எதற்கு? இந்து அறநிலையத்துறை என்ற பெயரில் மக்களிடமிருந்து பணத்தை சுரண்டுகிறார்கள். இந்துக்களுக்கு தமிழகத்தில் ஆன்மீகம் மற்றும் மத சுதந்திரம், வழிபாட்டு சுதந்திரம் உள்ளிட்டவை இல்லை” என்றார் எச்.ராஜா.