மதுரை மாட்டுத்தாவணியில் முருங்கைக்காய் கிலோ ரூ.400

மதுரை மாட்டுத்தாவணியில் முருங்கைக்காய் கிலோ ரூ.400

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் வழக்கம்போல் வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாமல் வெளியூர்ப் பகுதிகளிலிருந்தும் அதிக அளவில் காய்கறிகள் இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்கள், புறநகர் பகுதிகளிலிருந்தும் தினசரி காய்கறி வரத்து தொடர்கிறது. இங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் மொத்தமாக காய்கறிகள் அனுப்பப்படுகின்றன. அதே நேரத்தில் மதுரை நகரம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள சிறு, சிறு வியாபாரிகள் தங்களின் கடைகளுக்காக மொத்தமாகவும், சில்லறையாகவும் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முருங்கைக்காய் விலையில் பெரிய மாற்றமின்றி நிலை இருந்து வந்தது. கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனையாகி வந்த நிலையில், சமீப நாட்களாக பனிப்பொழிவு மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக முருங்கைக்காய் வரத்து கணிசமாக குறைந்துள்ளது. இதன் தாக்கமாக முருங்கைக்காய் விலை திடீரென உயர்ந்து கிலோ ரூ.400-க்கு விற்பனையானது.

வியாபாரிகள் தெரிவிப்பதாவது, தற்போது சந்தையில் ஒரு முருங்கைக்காய் சராசரியாக 40 முதல் 50 கிராம் எடையுடன் உள்ளது. இதனால் ஒரு கிலோவில் சுமார் 20 முதல் 25 முருங்கைக்காய்கள் மட்டுமே கிடைக்கின்றன. அந்த வகையில் கணக்கிட்டால், ஒரு முருங்கைக்காய் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சில்லறை கடைகளில் தரம் மற்றும் அளவைப் பொறுத்து ஒரு முருங்கைக்காய் ரூ.25முதல் ரூ.35 வரை விற்பனையாகும் சூழலும் காணப்படுகிறது.

இந்த விலையேற்றம் பொதுமக்களை பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக அன்றாட சமையலில் முருங்கைக்காயை அதிகம் பயன்படுத்தும் குடும்பங்கள், விலை உயர்வால் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களும் செலவுக் கட்டுப்பாடு காரணமாக முருங்கைக்காய் பயன்பாட்டை குறைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே தக்காளி உள்ளிட்ட பிற காய்கறிகளின் விலை நிலவரம் பெரும்பாலும் சீராகவே இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். ஆனால் காலநிலை சீராகி வரத்து அதிகரிக்கும் வரை முருங்கைக்காய் விலையில் பெரிய குறைவு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். பனிப்பொழிவு குறைந்து, உற்பத்தி மீண்டும் சீரானால் மட்டுமே விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.