“தேர்தல் ஆணையம் மூலமாக குறுக்கு வழியில் திமுகவை வீழ்த்த முயற்சி” - முதல்வர் ஸ்டாலின்

“தேர்தல் ஆணையம் மூலமாக குறுக்கு வழியில் திமுகவை வீழ்த்த முயற்சி” - முதல்வர் ஸ்டாலின்

“கொள்கை ரீதியாக திமுகவை வீழ்த்த முடியாததால், தேர்தல் ஆணையம் மூலமாக, குறுக்கு வழியில் வீழ்த்த முடியுமா என்று முயற்சி செய்கிறார்கள், அதுதான், சார் (SIR)” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இளைஞரணி சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் “திமுக 75 – அறிவுத்திருவிழா” நிகழ்வைத் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திமுக 75” நூலை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, “ திமுகவின் 75 ஆண்டுகள் பயணத்தை நினைவுகூரும் இந்த விழாவுக்கு, "அறிவுத் திருவிழா" என்று உதயநிதி பெயர் வைத்திருக்கிறார். இதைவிடப் பொருத்தமான தலைப்பு வேறு இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த அறிவுத் திருவிழாவை இத்தோடு நிறுத்திவிடாமல், தொடர்ந்து ஆண்டுதோறும் நீங்கள் நடத்திட வேண்டும் என்று அவருக்கு நான் கோரிக்கை வைக்கிறேன்.

முழுக்க முழுக்க சாமானியர்களால் தொடங்கப்பட்டு, 1967-ல் முதல் மாநிலக் கட்சியாக ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்த கழக வரலாற்றை, இன்று வரை மீண்டும் மீண்டும் பல்வேறு கோணங்களில், பல ஆய்வாளர்கள் ஆர்வத்துடன் ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்கிறார்கள். ‘ஏதோ கட்சியைத் தொடங்கினோம், அடுத்த முதலமைச்சர் நான்தான்’ என்று அறிவித்தோம் என்று நாம் ஆட்சிக்கு வரவில்லை.

இந்த வரலாறு பற்றியெல்லாம் தெரியாத சிலர், நம்மை மிரட்டிப் பார்க்கிறார்கள். இன்னும் சில அறிவிலிகள் திமுகவைப் போலவே வெற்றி பெறுவோம் என்று பகல் கனவு காண்கிறார்கள். திமுகவைப் போன்று வெற்றி பெற, திமுகவைப் போன்று உழைப்பும், அறிவும் தேவை. ஒரு சூரியன். ஒரு சந்திரன். ஒரு திமுக தான். இனி இப்படியொரு இயக்கம் இந்த மண்ணில் தோன்ற முடியாது.

இப்படி, இந்தியாவே போற்றும் இயக்கமாக நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ந்திருக்கிறது. இந்தச் சாதனைகளும் - வளர்ச்சியும்தான் பலரின் கண்களை உறுத்துகிறது. நாம் பேசும், சமூகநீதி - சுயமரியாதை - மாநில சுயாட்சி - கூட்டாட்சி - ஆகிய கருத்துகள் இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் பரவிவிட்டது! “என்னடா இவர்களைத் தமிழ்நாட்டிலேயே முடக்க நினைத்தால், இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்களே” என்று கோபப்படுகிறார்கள்.

எனவே, நான் பெருமையுடன் சொல்கிறேன். இந்த அறிவுத் திருவிழா, “திராவிடம் வெல்லும், அதைக் காலம் சொல்லும்!” என்று முழங்கும் திருவிழா.

இங்கு இருக்கும் இளைஞரணித் தம்பிமார்களைப் பார்க்கிறபோது, இது கூடிக் கலையும் கூட்டமாக இல்லாமல், காலந்தோறும் கொள்கைகளைக் கூர்தீட்டிக் கொள்ளும் கூட்டமாக இருப்பதால்தான், எத்தனை பெரிய எதிரிகள் வந்தாலும் - எத்தனை பெரிய தந்திரங்களைக் கொண்டும் நம்மை வீழ்த்த முடியவில்லை என்று உணர்த்துகிறது. கொள்கை ரீதியாகத் திமுகவை வீழ்த்த முடியாததால், தேர்தல் ஆணையம் மூலமாக, குறுக்கு வழியில் வீழ்த்த முடியுமா என்று முயற்சி செய்கிறார்கள், அதுதான், சார்.

ஏன் இந்த சாரை அவசர அவசரமாக நடத்த வேண்டும்? தேர்தல் நெருக்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் இது வேண்டாம் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் சொல்லியும், ஏன் நடத்த வேண்டும்? இதையெல்லாம் காது கொடுத்து கேட்காமல், தேர்தல் ஆணையம் சார் பணிகளை தொடங்கிவிட்டார்கள். இதற்கு எதிராகச் சட்டரீதியாகவும் – அரசியல்ரீதியாகவும் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம், தொடர்ந்து போராடப் போகிறோம், போராடுவோம், அது வேறு!

இந்த நேரத்தில், இளைஞரணியிடம் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, களத்தில் வேலை செய்யும் நீங்கள், எந்தவொரு போலி வாக்காளரும் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்! உண்மையான நம்முடைய வாக்காளர்கள் விடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். யாருடைய வாக்குரிமையும் பறிபோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காகக் களப்பணியாற்ற வேண்டும்.

இந்தியாவின் ஜனநாயகத்தையும் - தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் காக்க – 2019 முதல் தொடரும் நம்முடைய பயணம், 2026-லும் மாபெரும் வெற்றியைப் பெறும்! “திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும்” பெரியாரின் - அண்ணாவின் - தலைவர் கலைஞரின் - இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் - கொள்கை வாரிசுகள் இருக்கும் வரை, தமிழ்நாடு தலைகுனியாது. தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.