தீரன் பட பிரபலம் அதிமுக எம்எல்ஏ சுதர்சன் கொலை வழக்கு.. பவாரியா கொள்ளையர்கள் தான் குற்றவாளிகள் என அதிரடி தீர்ப்பு!

தீரன் பட பிரபலம் அதிமுக எம்எல்ஏ சுதர்சன் கொலை வழக்கு.. பவாரியா கொள்ளையர்கள் தான் குற்றவாளிகள் என அதிரடி தீர்ப்பு!
’தீரன்’ படத்தின் மூலம் பிரபலமான, அதிமுக எம்எல்ஏ சுதர்சன் கொலை வழக்கில், கைதான பவாரியா கொள்ளையர்கள் குற்றவாளிகள் என சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது.
கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கே.சுதர்சனம். ஜெயலலிதாவின் அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2005ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு பெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் உள்ள இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், சுதர்சனத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது. மேலும், அவரது மனைவி மற்றும் மகன்களை தாக்கி, 62 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.
தனது கட்சி எம்.எல்.ஏ. கொல்லப்பட்டதை அறிந்த அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, கொள்ளையர்களைச் சுட்டுப்பிடிக்க ஆணை பிறப்பித்தார். அதன்படி, ஐஜியாக இருந்த ஜாங்கிட் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, முக்கியக் குற்றவாளி பிப்ரவரி ஒன்றாம் தேதி கைது செய்யப்பட்டார். தொடர் துப்பு துலக்கி மார்ச் மாதத்தில் ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். செப்டம்பரில் முக்கிய குற்றவாளிகள் இருவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதோடு, 32 பேர் மீது வழக்குப்பதிந்து ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். ஜாமின் பெற்ற மூன்று பேர் தலைமறைவான நிலையில், ஓம் பிரகாஷ் பவாரியா உள்பட இருவர் சிறையிலேயே உயிரிழந்தனர்.
தற்போது அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்த நிலையில், ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் குற்றவாளிகள் என சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது. ஜெயில்தார் சிங் குறித்து வரும் 24ஆம் தேதி தீர்ப்பளிப்பதாக நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் தெரிவித்துள்ளார்.
பவாரியா கொள்ளையர்களை பிடிக்க கை ரேகை பெரிதும் உதவியதாக, விசாரணை அதிகாரி தில்லை நடராஜன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தந்தை கொல்லப்பட்டது குறித்து முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனின் மகனும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான விஜயகுமார் விளக்கினார். தாமதமாக கிடைத்த தீர்ப்பாக இருந்தாலும், நீதி கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி கொள்வதாகவும் அவர் கூறினார்.