அடிதடி சினிமாவிற்கு இடையே ரீரிலீசாகும் ’ஆட்டோகிராஃப்’! இயக்குநர் சேரன் பெருமிதம்

அடிதடி சினிமாவிற்கு இடையே ரீரிலீசாகும் ’ஆட்டோகிராஃப்’! இயக்குநர் சேரன் பெருமிதம்

தற்போதைய சினிமா அடிதடி, வெட்டு குத்து, சண்டை என்றாகிவிட்ட சமயத்தில் ஆட்டோகிராஃப் படம் ரீரிலீஸ் செய்யப்படுகிறது என இயக்குநர் சேரன் கூறியுள்ளார்.

இயக்குநர் சேரன் தயாரித்து, இயக்கி, நடித்த ’ஆட்டோகிராஃப்’ திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் வரும் 14ஆம் தேதி ஆட்டோகிராஃப் திரைப்படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது. இதனை கொண்டாடும் விதமாக ஆட்டோகிராஃப் ரீயூனியன் என்ற தலைப்பில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் இயக்குநர் சேரன், நடிகை சினேகா, ஆட்டோகிராஃப் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டு பேசினர்.

இயக்குநர் சேரன் பேசுகையில், “இந்த இடம் என்னை விமர்சனம் செய்கின்ற இடமாக மாறிவிட்டது. இங்கு இருக்கக்கூடிய எல்லோருடனும் கருத்து வேறுபாடு உள்ளது. இருந்த போதிலும் நான் அவர்களை அவர்களாகவே நேசிப்பதால் இங்கு வந்துள்ளனர். என்னுடைய உதவி இயக்குநர்கள் என்னை பற்றி பல குறைகள் கூறினார்கள். அது அவர்களுடைய புரிதல்.

21 வருடங்களுக்கு பிறகு ஆட்டோகிராப் திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் பல பேருடைய வாழ்க்கையை மாற்றியுள்ளது, சினேகாவை இன்று வரை தோழியாக பார்க்கிறேன். பிரசன்னா, சினேகா திருமணத்தை நான் ஏற்பாடு செய்தேன், அதில் எனக்கு மகிழ்ச்சி.

ஆட்டோகிராஃப் படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது உள்ள சூழலுக்கு ஏற்றவாறு 50 லட்சம் ரூபாய் செலவு செய்து படம் மெருகேற்றப்பட்டுள்ளது. மேலும் தற்போது சினிமா என்றாலே ’வெட்டுக்குத்து சண்டை’ என்றாகிவிட்டது. இந்த சமயத்தில் ஆட்டோகிராஃப் படம் ரீரிலீஸ் செய்யப்படுகிறது” என்று சேரன் கூறினார்.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் அமீர் பேசுகையில், “20 ஆண்டுகளுக்கு முன்பும் சரி, தற்போது உள்ள சாதித்த இயக்குநர்கள் பாலா, மாரி செல்வராஜ், வெற்றிமாறன், ராம், சசி ஏன் நான் உட்பட எங்களை அனைவரையும் ஒரே தட்டில் வைத்தால் கூட சேரனின் சாதனைக்கு பக்கத்தில் கூட செல்ல முடியாது.

நான் சொன்னதை அந்த இயக்குநர்கள் ஒப்புக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் தான் இதனை கூறுகிறேன். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் சேரன் சாதித்த கலைஞன், தவிர்க்க முடியாத கலைஞன். எனக்கும் சேரனுக்கும் கருத்து முரண்பாடு உள்ளது, இதுவரை நான் சொல்வதை அவர் கேட்டதில்லை கேட்கவும் மாட்டார்” என்றார்.

நிறைவாக நடிகை சினேகா பேசுகையில், ”ஆட்டோகிராஃப் திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஒவ்வொரு காட்சியிலும் நுணுக்கமான நடிப்பை சேரன் கற்றுக் கொடுத்தார். அதற்கு ஒவ்வொரு பூக்களுமே பாடலே சாட்சி. ஆட்டோகிராஃப் திரைப்படத்தில் தொடங்கிய எங்கள் நட்பு 21 வருடங்களாக தொடர்கிறது.

ஆட்டோகிராஃப் படம் வெளியாகும் போது இப்படி ஒரு நட்பு இருக்க முடியுமா என என்னிடம் கேட்டார்கள், தற்போது வரை நாங்கள் அதே நட்பில் தான் இருக்கிறோம். சேரன் எவ்வளவு கஷ்டப்பட்டு ஆட்டோகிராஃப் திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார் என எங்களுக்கு தெரியும். நிச்சயம் மீண்டும் இப்படம் வெற்றி பெறும். ஜென் சி காலகட்டத்தில் விதவிதமாக காதல் செய்கிறார்கள். ஆனால் காதல் என்றால் இது தான் என ஆட்டோகிராஃப் படத்தில் காண்பித்துள்ளார். மீண்டும் இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என கூறினார்.