சொந்த மண்ணில் இந்தியாவை எதிர்கொள்ளவது எளிதல்ல - தினேஷ் கார்த்திக்
சொந்த மண்ணில் இந்திய அணியை எதிர்கொள்வது அவ்வளவு எளிதானது கிடையாது என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் எதிவரும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் நடப்பு சாம்பியன் இந்திய அணி சொந்த மண்ணில் சாம்பியன் பட்டத்தை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
அதற்கேற்ப, டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. இதில் அணியின் துணைக்கேப்டனாக அக்ஸர் படேல் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷான் ஆகியோருக்கு விக்கெட் கீப்பர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம் ஷுப்மன் கில், ஜித்தேஷ் சர்மா உள்ளிட்டோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
இது தவிர்த்து ஹர்திக் பாண்டியா, அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஷிவம் தூபே, ரிங்கு சிங், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் என நட்சத்திர பட்டாளங்களும் அணியில் இருப்பதால் நிச்சயம் இந்திய அணி கோப்பையை வெல்லும் என்ற ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், சொந்த மண்ணில் இந்திய அணியை எதிர்கொள்வது அவ்வளவு எளிதானது கிடையாது என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுகுறித்து ஜியோ ஸ்டார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தினேஷ் கார்த்திக், "உலகின் எங்கு போட்டிகள் நடைபெற்றாலும் அங்கு இந்தியா அணியை வீழ்த்துவது மிகவும் கடினமான காரியம். ஆனால் தற்சமயம் அவர்கள் தங்கள் சொந்த மண்ணில் விளையாடும்போது, அது எளிதாக இருக்காது என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர்கள் மிகச் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்த வரையில் இந்திய அணியின் வலிமை பற்றி அனைவருக்கும் நன்றாக தெரியும். குறிப்பாக சமீபத்தில் அவர்கள் பெற்ற வெற்றிகளைக் கருத்தில் கொண்டால், அவர்களால் கிட்டத்தட்ட இரண்டு அணிகளை உருவாக்கி, அவற்றைக் கொண்டும் மற்ற அணிகளுடன் மிக எளிதாகப் போட்டியிட முடியும். இதுவே இந்திய அணியின் பெரும் பலமாகவும் பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த உலகக் கோப்பை தொடரில் அவர்கள் விளையாடும் அணி முற்றிலும் புதியது. ஏனெனில் இப்போது ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற வீரர்கள் இல்லை. சூர்யகுமார் யாதவ் என்ற புதிய கேப்டன் தலைமையில், மிகவும் இளம் வீரர்களைக் கொண்ட அணியுடன், அவர்கள் மிகச் சிறப்பாகவும், ஆக்ரோஷமாகவும் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். அதனால் நிச்சயம் இந்த தொடரிலும் அவர் தங்களின் ஆதிக்கத்தை செலுத்துவார்கள்" என்று கூறியுள்ளார்.