இயக்குநராக அறிமுகமாகிறார் கென் கருணாஸ் - படப்பிடிப்பு நிறைவு

இயக்குநராக அறிமுகமாகிறார் கென் கருணாஸ் - படப்பிடிப்பு நிறைவு

'அசுரன்' திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகில் அழுத்தமாக தடம் பதித்த கென் கருணாஸ், தானே இயக்கி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

அசுரன், விடுதலை 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் கென் கருணாஸ். இதில், அசுரன் படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. கருணாஸின் மகனான இவர், தற்போது நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநர் அவதாரமும் எடுத்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக கென் கருணாஸே நடித்துள்ளார். அவரை தவிர, பிரபல மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, தேவதர்ஷினி, அனீஷ்மா அனில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ், நளினி ஆகியோரும், பல டிஜிட்டல் திரை பிரபலங்களும் நடித்திருக்கிறார்கள்.

விக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். பள்ளி மாணவ மாணவியர்களின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை, 'பார்வதா என்டர்டெய்ன்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கருப்பையா சி. ராம், சுலோச்சனா குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, ஒரே கட்டமாக இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இடைவிடாமல் அறுபது நாட்கள் வரை நடைபெற்றது. மாணவ மாணவியர்களின் பள்ளி வாழ்க்கையை திரையில் நேர்த்தியாக காட்சிப்படுத்துவதற்காக சென்னையின் மையப் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூட வளாகத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

படப்பிடிப்பின் போது, தினமும் குறைந்தபட்சம் நூறு துணை நடிகர்கள் கலந்து கொண்டதாகவும், முக்கிய காட்சிகளை படமாக்கும் போது 300 முதல் 450 துணை நடிகர்களை பயன்படுத்தியதாகவும் படக் குழு தெரிவித்திருந்தது. கேரளாவிலும் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றன.

இத்திரைப்படத்தின் மூலம் மூத்த நடிகை நளினி பல ஆண்டுகளுக்கு பிறகு திரையுலகில் மறுபிரவேசம் செய்ய உள்ளார். இப்படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே, வியாபார ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது படப்பிடிப்புகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இத்திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.