சிட் பண்ட் நடத்தி பண மோசடி: காங்கிரஸ் நிர்வாகி கைது
சிட் பண்ட் நடத்தி பண மோசடியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் நிர்வாகியை கைது செய்து போலீஸார் விசாரிக்கின்றனர். வளசரவாக்கம் அருகே காரம்பாக்கம், பொன்னி நகர், விவேகானந்தர் தெருவில் வசிப்பர் தளபதி பாஸ்கர் (52).
காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலராக உள்ளார். இவர் போரூரில் சிவலிங்கா சிட் ஃபைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிறுவனத்தை நடத்தியதில் பாஸ்கருக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
தளபதி பாஸ்கரின் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து, ஏமாந்தவர்கள் சென்னை காவல் ஆணையரிடம் ஏற்கெனவே புகார் அளித்திருந்தனர். அதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் திடீரென தலைமறைவான தளபதி பாஸ்கர், கோயம்பேட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருப்பது தெரிந்து நேற்று முன்தினம் இரவு அங்கு திரண்ட பணம் முதலீடு செய்தவர்கள் 25-க்கும் மேற்பட்டவர்கள், தளபதி பாஸ்கரை அறைக்குள் அடைத்து வைத்து பணத்தை திருப்பிக் கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.