ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம்; இந்திய நிறுவனங்கள் உள்பட 17 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!
ஈரான் நாட்டுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்கள் உள்பட 17 வர்த்தக நிறுவனங்கள், தனிநபர்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இந்த வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் பணம் தெஹ்ரான் பிராந்திய பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதோடு, அமெரிக்க நாட்டிற்கு நேரடி அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரான் நாட்டுடன் பெட்ரோல் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இந்தியாவைச் சேர்ந்த டிஆர்6 பெட்ரோ எல்எல்பி உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 17 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. இந்த வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் நிதி தெஹ்ரான் பிராந்திய பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதோடு, அமெரிக்காவிற்கு நேரடி அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அரசு நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்தியாவைச் சேர்ந்த ஜெய்ர் ஹுசைன் இக்பால் ஹுசைன் சயீத், சுல்பிகர் ஹுசைன் ரிஸ்வி சயீத் ஆகிய தனிநபர்கள், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆர்என் ஷிப் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் புனேவைச் சேர்ந்த டி.ஆர்.6 பெட்ரோ இந்தியா எல்எல்பி உள்ளிட்ட நிறுவனங்கள் ஈரானுடன் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளன.
இந்த எண்ணெய் வர்த்தகத்தால் கிடைக்கும் நிதி, ஈரானின் பிராந்திய பயங்கரவாத பிரதிநிதிகளை ஆதரிப்பதற்கும், அமெரிக்கப் படைகள் மற்றும் அமெரிக்க நட்பு நாடுகளுக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இந்த நிதி ஆயுதம் வாங்குவதற்கு பயன்படுத்தப்படுவதோடு, சர்வதேச கடல் வழி வர்த்தகம் மற்றும் கடல் வழி போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவை தளமாகக் கொண்ட டி.ஆர்.6 பெட்ரோ இந்தியா எல்எல்பி நிறுவனம் கடந்த அக்டோபர் 2024 முதல் ஜூன் 2025 வரை மட்டும் 8 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஈரானிய தாரை இறக்குமதி செய்துள்ளது.
மேலும் பனாமா, சீஷெல்ஸ் உள்பட பல்வேறு நாடுகளில் ஈரானின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக டிஆர்6 பெட்ரோ இந்தியா எல்.எல்.பி நிறுவனம் உள்ளிட்ட 17 நிறுவனங்கள் செயல்படுவதால் இவற்றின் மீது பொருளாதார தடை விதிக்கப்படுகிறது.
இந்தியா மட்டுமில்லாமல், சர்வதேச அளவில் 41 நிறுவனங்கள், தனி நபர்கள், கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு எதிராகவும் பொருளாதார தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன், பயங்கரவாத நடவடிக்கைகளின் அனைத்து அம்சங்களுக்கும் நிதி உதவி அளிக்கும் ஈரான் நாட்டின் சட்ட விரோத செயல்பாடுகளை ஒடுக்குவதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. ஈரான் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறையை குறிவைக்கும் பயங்கரவாத எதிர்ப்பு விதிகள்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்று அமெரிக்க அரசு நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.