தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பினால் நிகழும் உயிரிழப்பு குறைந்துள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பினால் நிகழும் உயிரிழப்பு குறைந்துள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பினால் நிகழும் உயிரிழப்புகள் வெகுவாக குறைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை அடுத்த மேடவாக்கம் ஊராட்சியில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் நடந்தது. அதனை மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பரிசோதனை மையங்களை ஆய்வு செய்தார். இதையடுத்து முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு அட்டைகளை வழங்கினார்.

இறுதியாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “தமிழ்நாடு முழுவதும் 1,256 முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த 9 வாரங்களில் 333 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. அதனால் 5,29,258 பேர் பலன் அடைந்துள்ளனர். 10வது வாரமாக 39 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாகளில் மிக சிறப்பு வாய்ந்த திட்டமாக பார்க்கப்படுவது மாற்று திறனாளிகளுக்கு சான்று வழங்கும் திட்டம்தான்.

முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஒரு கோடியே 47 லட்சம் குடும்பங்கள் உள்ளனர். இந்த முகாமில் பொது மருத்துவம், குழந்தை, நரம்பியல், கண், பல் என 17 சிறப்பு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை நடக்கிறது. ’மக்களை தேடி மருத்துவம்’ திட்டம் முலம் 2.5 கோடி மக்களுக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன. இந்த முகாம் முலம் முழு உடல் பரிசோதனை செய்து மருத்துவம் பார்க்கப்படுகின்றது” என்றார்.

ஒவ்வொரு மழை காலங்களிலும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 2017ஆம் ஆண்டில் 65 பேர் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. இந்த ஆண்டில் 8 பேர் டெங்கு பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அதுவே ஒரு ஆள் கூட டெங்கு பாதிப்பால் உயிரிழக்க கூடாது என்பதுதான் எங்களது இலக்கு. மக்கள் டெங்கு குறித்து அறிவுரை தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். தாங்களாக எந்த மருந்துகளையும் எடுத்து கொள்ள வேண்டாம்” என்றார்.

தொடர்ந்து இருமல் மருந்து விவகாரம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி முன்வைக்கும் விமர்சனங்கள் குறித்து கேட்டதற்கு, “தமிழகத்தில் 397 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்க்ள் முலம் 100 நாடுகளுக்கு ரூ. 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் கோடி ஏற்றுமதி செய்யப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி குறை கூறி அரசியல் செய்வது சரி அல்ல. எதையாவது பேசி தன்னை அரசியல் களத்தில் காட்டிகொள்வதற்காக முயற்சி செய்து வருகிறார்” என்றார்.