அந்த காலத்திலேயே சர்ச்சையை ஏற்படுத்திய ‘தாஸி அபரஞ்சி’

புராண, சரித்திரக் கதைகள் அதிகம் உருவான ஆரம்பக் காலகட்ட சினிமாவில் சில திரைப்படங்கள், பெண்களை மையப்படுத்தியும் பாலியல் சார்ந்த விஷயங்களைக் கொண்டும் உருவாகி இருக்கின்றன. அதில் ஒன்று, ‘தாஸி அபரஞ்சி’. தேவதாசிபெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவான இந்தப் படம் அந்த காலத்திலேயே சர்ச்சையை ஏற்படுத்தியது. கூடவே, சில பத்திரிகைகள் இதைத் துணிச்சலான படம் என்றும் பாராட்டின.
விக்கிரமாதித்தன் என்ற மன்னன் உஜ்ஜைனியில் ஆட்சி புரிகிறார். அங்குள்ள மகதபுரி எனும் ஊரில், பேரழகுகொண்ட அபரஞ்சி என்ற தேவதாசி வாழ்கிறார். 64 கலைகளிலும் தேர்ச்சிப் பெற்ற அவர், தன்னைப் பற்றிய பெருமை கொண்டவராக இருக்கிறார். தன்னை யாராவது மனதளவில் நினைத்தால் கூட ஆயிரம் பொற்காசுகளைக் கூலியாகக் கேட்பவர். ஆனால், அதிக பக்திகொண்ட அவர் கைலாசம் செல்ல வேண்டும் என்று இறைவனை நினைத்து தினமும் பிரார்த்தனை செய்கிறார்.
மன்னன் விக்கிரமாதித்தன் ஆறு மாதம் காட்டில் தியானம் செய்வதை வழக்கமாகக் கொண்டவன். அவனுடன் அமைச்சர் விஜயனும் ராணி பத்மாவதியும் செல்கிறார்கள். நய வஞ்சகனான விஜயனுக்கு நாட்டின் மீதும் ராணி பத்மாவதி மீதும் ஆசை இருக்கிறது. மன்னனுக்கும் விஜயனுக்கும் அதிசயக் கலை ஒன்று தெரியும். அது மற்றொருவர் உடலுக்குள் கூடு பாய்வது.
ஒருநாள் விஜயன், ஒரு கிளியைக் கொன்றுவிட்டு,போலியாக அழுகிறான். அதைப் பார்த்து மனம் இளகும் மன்னன், தன் உடலை விட்டு, கிளிக்குள் புகுந்து அதற்கு உயிர்கொடுக்கிறான். இதைப் பயன்படுத்திக் கொள்ளும் விஜயன், ராஜாவின் உடலுக்குள் புகுந்து, அவர் உருவத்தில் அரண்மனைக்குத் திரும்புகிறான்.
ராஜாவின் உயிர், கிளிக்குள் இருக்கிறது. அந்தக் கிளியை வேட்டைக்காரன் பிடித்து, பணக்காரரும் பஞ்சாயத்துத் தலைவருமான தனபாலிடம் விற்றுவிடுகிறான். இப்போது, அந்த புத்திசாலி கிளி, தனபாலுக்கு வரும் வழக்குகளைத் தீர்ப்பதில் உதவுகிறது. சிக்கலான வழக்குகளுக்கும் எளிதாகத் தீர்வு சொல்கிறது.
ஒருநாள் ஒரு விசித்திர வழக்கு வருகிறது இவர்களிடம். அதாவது, ஏழை பூசாரி ஒருவருக்குப் பேரழகியான அபரஞ்சி மீது ஆசை வருகிறது. ஆனால் கூலி கொடுக்க முடியாத ஏழை அவர். ஒரு வசிய மருந்து தயாரித்து வேலைக்காரி மூலமாக அபரஞ்சியிடம் கொடுக்க ஏற்பாடு செய்கிறார். ஆனால், அந்த வேலைக்காரப் பெண், அதை தான் சாப்பிட்டு விடுகிறார்.
இதற்கிடையே அபரஞ்சி தன்னைத் தேடி வருவார் என காத்திருக்கும்பூசாரி, அவர் வராததால் தூங்கிவிடுகிறார். பூசாரியின் கனவில் வருகிறார், அபரஞ்சி. அந்தக் கனவு பூசாரிக்கு உண்மையாகத் தோன்றுகிறது. அடுத்த நாள் காலை அந்த கனவை நண்பர்களிடம் சொல்கிறார். அதைக் கேட்கிற அபரஞ்சி, கனவில் தன்னை நினைத்ததால் ஆயிரம் பொற்காசுகளைக் கேட்கிறார். பணம் இல்லாததால் பூசாரியை, தனபாலிடம் இழுத்துச் செல்கிறார் அபரஞ்சி.
அப்போது அந்தக் கிளி அற்புதமான தீர்ப்பு ஒன்றைச் சொல்கிறது. ஒரு கண்ணாடியைக் கொண்டு வரச் சொல்கிறது. அதில் இப்போது பொற்காசுகள் பிரதிபலிக்கின்றன. ‘பூசாரி, உன்னைக் கனவில் மட்டுமே சந்தித்தார். அதனால் கண்ணாடியில் பிரதிபலிக்கும்பொற்காசுகளைக் கூலியாக எடுத்துக் கொள்’ என்கிறது அபரஞ்சியிடம். தனக்கு எதிராகத் தீர்ப்பளித்த கிளியைக் கொன்று விடுவதாக சபதம் போடுகிறார் அபரஞ்சி.அது நிறைவேறியதா? கைலாயம் செல்ல வேண்டும் என்ற அவர் கனவு என்னவானது என்பது கதை.
அபரஞ்சியாக, புஷ்பவல்லி நடித்திருந்தார். இவர் ‘சம்பூர்ண ராமாயணம்’ (1936) படத்தில் சிறுவயது சீதாவாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர். பின்னர், மிஸ் மாலினி, சக்ரதாரி, வேலைக்காரி மகள் என பல படங்களில் நடித்தவர். இவர், காதல் மன்னன் ஜெமினிகணேசனின் 2-வது மனைவியாவார்.
தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கொத்தமங்கலம் சுப்பு, ஏழைப் பூசாரியாகவும், வேலைக்காரி சிங்காரியாக எம்.எஸ்.சுந்தரிபாயும் மன்னனாக எம்.கே.ராதாவும் விஜயனாக எம்.ஆர்.சுவாமிநாதனும் நடித்திருந்தனர். கொத்தமங்கலம் சீனு, புலியூர் துரைசாமி அய்யா உள்பட பலர் நடித்தனர்.
பி.என்.ராவ் இயக்கிய இந்தப் படத்தை ஜெமினி ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.எஸ்.வாசன் தயாரித்தார். பி.எஸ்.ரங்கா ஒளிப்பதிவு செய்தார். எம்.டி.பார்த்தசாரதி, எஸ்.ராஜேஸ்வர ராவ் இசை அமைத்தனர். இப்படத்தில் நடித்து, கதை, வசனம், பாடல்கள் எழுதி, துணை இயக்குநராகவும் பணியாற்றினார், கொத்தமங்கலம் சுப்பு.
‘காணவேண்டும் கயிலையை...’, ‘ஆசைக் கொள்ளாதவர் ஆண்பிள்ளையோ..?’, ‘வேலைக்கார கேலி பிழைப்பு’,‘ஆசையா என் மேல் ஆசையா?’, ‘ஆசையினால் வரும் துன்பம்’ என்பது உள்பட 15 பாடல்கள் இடம்பெற்றன. 1944-ம் ஆண்டு ஆக.10-ல் வெளியாகி வெற்றி பெற்றது, இந்தப் படம். அக்காலகட்டத்தில் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.