கோவை வாகன உதிரிபாக விற்பனைக் கடையில் பயங்கர தீ விபத்து
கோவையில் வாகன உதிரிபாக விற்பனைக் கடையில் தீ பயங்கர விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.
கோவை காட்டூர் அருகே, பட்டேல் சாலையில், பிள்ளையார் கோயில் தெரு உள்ளது. இந்தப் பகுதியில், தனியாருக்கு சொந்தமான மாதேஸ்வரி இயந்திர உதிரிபாகங்கள் விற்பனைக் கடை உள்ளன. தரைத்தளம் மற்றும் முதல் தளம், 2-ம் தளம் கொண்ட கட்டிடமாக இது உள்ளது.
இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் கடை உள்ளது. மற்ற இரு தளங்களும் கடையின் பொருட்கள் வைக்க உள்ளிட்டவற்றுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று (ஜன.23) மதியம் வழக்கம் போல், கடையில் ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். மேலும், இக்கட்டிடத்தின் ஒரு தளத்தில் வெல்டிங் வைக்கும் பணிகளும் நடைபெற்று வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், இக்கட்டிடத்தின் மேல் தளத்தில் இருந்து திடீரென கரும்புகை வெளியே வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், விசாரித்த போது, கடையில் தீப்பிடித்தது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கட்டிடத்தில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மாநகர காவல் ஆணையர் என்.கண்ணன், மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன், காவல் துணை ஆணையர் என்.தேவநாதன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து தீயணைப்புப் பணியை போலீஸாருடன் இணைந்து தீவிரப்படுத்தினர். அக்கட்டிடம் அருகே இருந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றினர்.
மேலும், மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிலையங்களில் இருந்து தீயணைப்பு ஊர்திகள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு தீயணைப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. உள்ளே இயந்திர உதிரி பாகங்கள் உள்ளிட்டவை இருப்பதால் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் அப்பகுதியில் கடுமையாக கரும்புகை சூழ்ந்தது. தீயை முழுமையாக கட்டுப்படுத்த மேலும் சில மணி நேரங்கள் ஆகும் எனத் தெரிகிறது.