‘அரசமைப்பை காக்க ராகுல் காந்தி போராடுகிறார்’ - அமைதிக்கான நோபல் பரிசு குறித்து காங். கருத்து

அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர போராடிய மரியா கொரினா மச்சாடோவுக்கு நேற்று அறிவிக்கப்பட்டது. அவர் வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவருடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ஒப்பிட்டுள்ளார் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுரேந்திரா ராஜ்புத்.
“அரசமைப்பை பாதுகாக்கும் நோக்கில் போராடிய வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு இந்த முறை அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, தேசத்தின் அரசமைப்பை காக்கும் போராட்டத்தில் தலைமை வகிக்கிறார்” என இந்தி மொழியில் எக்ஸ் சமூக வலைதள பதிவில் சுரேந்திரா ராஜ்புத் தெரிவித்துள்ளார்.
யார் இந்த மரியா? - கடந்த 1967-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி வெனிசுலாவின் கரகஸ் நகரில் மரியா கொரினா மச்சாடா பிறந்தார். பொறியாளரான இவர் கடந்த 2001-ம் ஆண்டில் சுமேட் என்ற தொண்டு அமைப்பை தொடங்கினார்.
இதன்பிறகு அவர் அரசியலில் கால் பதித்தார். கடந்த 2010-ம் ஆண்டில் வெனிசுலா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தில் சர்வாதிகாரம், ஊழலுக்கு எதிராக துணிச்சலாக குரல் எழுப்பினார். இதன்காரணமாக கடந்த 2014-ம் ஆண்டில் அவரது எம்பி பதவி ரத்து செய்யப்பட்டது.
கடந்த 2024-ம் ஆண்டில் நடைபெற்ற வெனிசுலா அதிபர் தேர்தலில் ஜனநாயக ஒற்றுமை வட்டமேஜை என்ற எதிர்க்கட்சிகள் கூட்டமைப்பு சார்பில் மரியா போட்டியிட்டார். ஆனால் அதிபர் தேர்தலில் போட்டியிட அவருக்கு தடை விதிக்கப்பட்டது.
கடந்த 2013-ம் ஆண்டு முதல் வெனிசுலாவின் அதிபராக நிக்கோலஸ் மதுரோ பதவி வகித்து வருகிறார். அவரது ஆட்சிக்கு எதிராக மரியா தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார். அந்த நாட்டின் இரும்பு பெண்மணியாக அவர் போற்றப்படுகிறார். கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற மரியாவுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் 3 பேரும் வெளிநாடுகளில் உள்ளனர்.