பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இடம்பெறுமா? - திருமாவளவன் ‘வழவழா கொழகொழா’

பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இடம்பெறுமா? - திருமாவளவன் ‘வழவழா கொழகொழா’

பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இடம்பெறுமா ? என்ற கேள்விக்கு, நேரடியாக பதிலளிக்காமல் ‘அதிமுக - பாஜக இருக்கிற அணிகளில் இடம் பெறுவதில்லை என 2011-ல் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். பல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவில் தெளிவாக உள்ளோம்’ என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று திருச்சிக்கு வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது: இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை முன்னிறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி செயல்பட்டு வருகிறது. தேசிய அளவில் அவரவர் தாய்மொழியை பாதுகாக்க வேண்டியதேவை உள்ளது.

ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே மதம் என்ற வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவது நாட்டின் பன்மைத்துவத்துக்கு ஆபத்தாக முடியும். இரட்டை இன்ஜின் அரசு என பிரதமர் மோடி சொல்வது டெல்லியில் ஒரு இன்ஜின், தமிழகத்தில் ஒரு இன்ஜின் என்பதாக சொல்கிறாரா என்ற தெளிவு தேவை. தமிழகத்தில் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி இயங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியபோது, தமிழகத்தில் பிரதமரின் தலைமையில் கூட்டணி ஆட்சி மலரும் என்கிறார்.

அதிமுக ஆட்சி மலரும் என்ற நிலை மாறி, கூட்டணி ஆட்சி மலரும் என கூறுவது கவலையளிக்கிறது. பாஜகவின் பிடிக்குள் அதிமுக சென்றுள்ளது. 2011 தேர்தலின்போது அதிமுக, பாஜக இருக்கிற அணிகளில் இடம்பெறுவதில்லை என நாங்கள் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். பாமக ராமதாஸ் அணி திமுக கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளதா என ஆரூடம் சொல்ல அவசியமும், தேவையும் எனக்கு இல்லை. திமுக அணியுடன் ராமதாஸ் இணைவது குறித்து முடிவு எடுக்க வேண்டியது திமுகதான்.

பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இடம்பெறுமா என கேட்கிறீர்கள். இந்த விவகாரத்தில் நாங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவில் தெளிவாக உள்ளோம். பாஜக தலைமையிலான அரசையோ, செயல்பாடுகளையோ விமர்சிக்க வேண்டிய இடத்தில்கூட தவெக தலைவர் விஜய் விமர்சிக்கவில்லை என்பது அவர் மீதான சந்தேகத்தை அதிகரிக்கிறது. இந்த தேர்தலில் விஜய் தனித்தோ அல்லது தனது தலைமையில் கூட்டணியை உருவாக்கியோ போட்டியிடுவார் என நினைக்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.