கபடி உலகக் கோப்பையை வென்ற சாதனை மங்கைகளுக்கு குவியும் வாழ்த்து மழை!

கபடி உலகக் கோப்பையை வென்ற சாதனை மங்கைகளுக்கு குவியும் வாழ்த்து மழை!

கபடி உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய மகளிர் அணிக்கு, இந்திய பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சர்வதேச கபடி சம்மேளத்தின் இரண்டாவது மகளிர் கபடி உலகக் கோப்பை தொடரானது வங்கதேசத்தில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 35-28 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபே அணி அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்ததுடன், சாம்பியன் பட்டத்தையும் தட்டிச்சென்றது.

இதன் மூலம் இந்திய மகளிர் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. முன்னதாக கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணி சாம்பியன் படத்தை வென்றது. இந்நிலையில் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வழ்த்துகள் குவிந்து வருகின்றன.

அந்த வகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில், “2025 கபடி உலகக் கோப்பையை வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்த நமது இந்திய மகளிர் கபடி அணிக்கு வாழ்த்துக்கள்! அவர் தங்களின் மன உறுதி, திறமை மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்னர். அவர்களுடைய இந்த வெற்றியானது எண்ணற்ற இளைஞர்களை கபடி விளையாட்டில் ஈடுபடவும், பெரிய கனவு காணவும், உயர்ந்த இலக்கை அடையவும் ஊக்குவிக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது பதிவில், “உலகக் கோப்பையை வென்று தேசத்தை பெருமைப்படுத்திய இந்திய மகளிர் கபடி அணிக்கு வாழ்த்துக்கள். உங்கள் மன உறுதி, ஒழுக்கம் மற்றும் தைரியம் இந்தியாவின் உணர்வை வெளிப்படுத்துகின்றன. தேசம் உங்களை வணங்குகிறது. ஜெய் ஹிந்த்” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில், “தாக்காவில் நடைபெற்ற மகளிர் கபடி உலகக் கோப்பை தொடரில் சீன தைபே அணியை 35 - 28 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய மகளிர் கபடி அணிக்கு வாழ்த்துக்கள். தொடர்ச்சியாக இரண்டாவது உலக பட்டத்தை வெல்வது நமது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் தருணமாகும். சரியான ஆதரவு மற்றும் வளர இடம் இருந்தால், உலக அரங்கை வெல்ல முடியும் என்பதை நமது மகள்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார்.