‘ஆடினே இருப்பேன்’ - கார் லைட்டையும் பொருட்படுத்தாமல் சாலையோர புல்வெளியில் ஹாயாக விளையாடிய சிறுத்தை!

‘ஆடினே இருப்பேன்’ - கார் லைட்டையும் பொருட்படுத்தாமல் சாலையோர புல்வெளியில் ஹாயாக விளையாடிய சிறுத்தை!

ஆசனூர் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள புல்வெளியில் சிறுத்தை ஒன்று ஹாயாக படுத்து, உருண்டு விளையாடும் வீடியோ காட்சி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

சத்தியமங்கலம் புலிகள்  காப்பகத்துக்குட்பட்ட ஆசனூர் வனக்கோட்டத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் தமிழக - கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியும் அடங்கும். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தாளவாடியைச் சேர்ந்த சிலர் அந்த தேசிய நெடுஞ்சாலை வழியாக காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆசனூர் அருகே சாலையோரப் பகுதியில் சிறுத்தை ஒன்று ஹாயாக படுத்து உருண்டு விளையாடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் காரை நிறுத்தி உள்ளே அமர்ந்தவாறு சிறுத்தையை படம்பிடித்துள்ளனர். காரின் முகப்பு விளக்கு வெளிச்சத்தைக் கண்ட சிறுத்தை அதை கொஞ்சம்கூட கண்டுகொள்ளாமல் விளையாடியது. அந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பேசிய வாகன ஓட்டி ஒருவர், “அடர்ந்த வனத்தின் மத்தியில் தேசிய நெடுஞ்சாலை செல்வதால் வன விலங்குகள் அவ்வப்போது சாலையை  கடந்து செல்கின்றன. சாலையின் இருபுறமும் 12 மீட்டர் தூரத்தை வனத்துறை சுத்தம் செய்துள்ளனர். இதனால் வனவிலங்குகள் சாலையை கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பது குறைந்துள்ளது” என்றார்.