சென்னையில் குப்பை லாரி மோதி 8 வயது சிறுமி உயிரிழப்பு!
3 ஆம் வகுப்பு மாணவி தனது உறவினருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது குப்பை லாரியில் சிக்கி உயிரிழந்தார்.
தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் உள்ள நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பு 13 மாடியில் வசித்து வருபவர் வெங்கடேசன், இவர் மீன் பாடி ரிக்ஷா ஓட்டி வருகிறார். இவருக்கு சரளா என்ற பெண்ணுடன் திருமணமாகி யுவராஜ் (15) என்ற மகனும், காவியா (8) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் காவியா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளிக்கு காலதாமதமாக சென்றதால் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் தாய் சரளா மற்றும் காவியா தண்டையார்பேட்டை உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். நேற்று பிற்பகல் காவியா தனது உறவினருடன் சேர்ந்து இரு சக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டல குப்பை லாரி முன்னே சென்றுள்ளது.
இவர்கள் வீட்டிற்கு திரும்பும் போது லாரியில் இடது பக்க பின் சக்கரத்தில் சிக்கி உள்ளனர். அதில் பின்னால் அமர்ந்து வந்த காவியா சக்கரத்தில் சிக்கி, தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், உறவினர்கள் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த குப்பை லாரி டிரைவரான சரண்ராஜ் (35) என்பவரை சரமாரியாக தாக்கியும் குப்பை லாரி கண்ணாடிகளை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.
இந்த தகவலை அறிந்த தண்டையார்பேட்டை போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர்கள் வேலு, தாரிக் அகமது, தினகரன், மற்றும் தண்டையார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து லாரி ஓட்டுநர் சரண்ராஜை மீட்டு காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு மண்டல போக்குவரத்து பிரிவு காவல் இணை ஆணையர் சோனம் சந்திரா, போக்குவரத்து காவல் உதவி ஆணையர் ஸ்ரீநிவாசன் மற்றும் போலீசார் பள்ளி மாணவி காவியாவின் உடலை மீட்டு பிரோத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.