உஷார்!. தமிழகத்தில் குழந்தைகளுக்கான இருமல் மருந்துக்கு தடை!.
தமிழகத்தில் ”Almont Kid” என்ற குழந்தைகளுக்கான சளி மருந்துக்கு தடை விதித்து மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தின் இருமல் மருந்து விவகாரத்தை தொடர்ந்து இருமல் மருந்துகள் மீதான கவனிப்பு அதிகரித்துள்ளது. இந்தநிலையில், ஆல்மாண்ட்-கிட் சிரப் மருந்தில் எத்திலீன் கிளைக்கால் (EG) கலப்படம் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதால், அதன் பயன்பாடு, விற்பனை மற்றும் விநியோகத்தை நிறுத்தும்படி மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. புதுச்சேரி அரசும் மேலும் சில மாநிலங்களும் ஏற்கனவே இந்த சிரப் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தன.
சமீபத்தில் வெளியிடப்பட்ட தனது பொது எச்சரிக்கை அறிவிப்பில், மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் கூறியிருப்பதாவது, பீகாரைச் சேர்ந்த ட்ரைடஸ் ரெமெடீஸ் நிறுவனம் தயாரித்த, ஆல்மாண்ட்-கிட் சிரப் (லெவோசெடிரிசின் டைஹைட்ரோகுளோரைடு மற்றும் மான்டெலுகாஸ்ட் சோடியம் சிரப்) பேட்ச் எண் AL-24002-ல், நச்சுத்தன்மை வாய்ந்த எத்திலீன் கிளைக்கால் (EG) கலப்படம் செய்யப்பட்டிருப்பது ஆய்வக அறிக்கைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நச்சுப் பொருளை உட்கொண்டால், அது சிறுநீரக செயலிழப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்தும். எனவே, இந்த சிரப்பை வாங்குவது, விற்பது மற்றும் உட்கொள்வது ஆகியவை திட்டவட்டமாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள சில்லறை விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் இந்த பேட்ச் மருந்தை உடனடியாக அகற்றவும், இந்தத் தயாரிப்பு விநியோகிக்கப்பட்டாலோ அல்லது விற்கப்பட்டாலோ அது குறித்துத் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இந்த சிரப்பை உட்கொண்டிருக்கக்கூடிய நோயாளிகளிடம் எத்திலீன் கிளைக்கால் நச்சுத்தன்மையின் அறிகுறிகளைக் கண்காணிக்குமாறு சுகாதாரப் பணியாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.