மக்களின் கனவு உலகம் தமிழ்நாட்டின் சொர்க்க பூமி போடிமெட்டு - வாகனங்கள் ஜாக்கிரதை

மக்களின் கனவு உலகம் தமிழ்நாட்டின் சொர்க்க பூமி போடிமெட்டு - வாகனங்கள் ஜாக்கிரதை

தேனியிலிருந்து சர்வதேச சுற்றுலாத் தலமான மூணாறுக்குச் செல்லும் முக்கிய வழித்தடத்தில் போடி மெட்டு அமைந்துள்ளது. 17 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளுடன் காணப்படும் போடி மெட்டு மலைப்பாதை பனிப்போர்வையால் முழுமையாக மூடப்பட்டிருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரமான சிகரங்களுக்கு இடையே போடி மெட்டு சாலை அமைந்துள்ளதால், அரபிக் கடலில் இருந்து வீசும் ஈரப்பதம் மிக்க காற்று மலைமுகடுகளில் மோதி, சட்டென குளிர்ந்து மேகக்கூட்டங்களாக மாறுகிறது. இதுவே இப்பகுதியில் மற்ற இடங்களை விட பனிமூட்டம் அதிகமாக இருக்க காரணமாக பார்க்கப்படுகிறது.

கடந்த இரு தினங்களாக, எதிரே வரும் வாகனங்கள் சில அடி தூரத்தில் கூடத் தெரியாத அளவிற்குப் பனி சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மிகவும் மெதுவாகச் சென்றனர். கடும் குளிராலும், பனியாலும் முந்தல், குரங்கணி மற்றும் போடிமெட்டு கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. ஏலக்காய், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் காய்கறி ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பனிப்புகைக்கு நடுவே ஊர்ந்து சென்றன.

தொடர் மழை மற்றும் பனி காரணமாகச் சாலைகளில் ஈரப்பதம் அதிகரித்து வழுக்கும் தன்மை ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த வாரம் ஏற்பட்ட மண்சரிவைத் தொடர்ந்து, ஆங்காங்கே சிறிய கல் சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வளைவுகளில் முந்திச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஒலியை எழுப்பியபடி, மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என போக்குவரத்துப் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.


தற்போது போடிமெட்டு மலைப்பாதையில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக, பொங்கலுக்கு மூணாறு சுற்றுலா செல்வோர் சில பாதுகாப்பு வழிமுறைகளை அவசியம் பின்பற்றினால் மிகவும் நல்லது. மலைப்பாதையில் பனிமூட்டம் பகலிலேயே அடர்த்தியாக இருப்பதால், மாலை 5 மணிக்கு மேல் அல்லது அதிகாலை நேரங்களில் பயணத்தைத் தவிர்க்கவும். இரவு நேரப் பயணம் மிகவும் அபாயகரமானதாக பார்க்கப்படுகிறது.

உங்கள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை மற்றும் பனி விளக்குகளை (Fog lights) கண்டிப்பாக எரிய விடவும். எதிரே வரும் வாகனங்களுக்கு உங்கள் இருப்பிடத்தை உணர்த்த இதுவே ஒரே வழியாகும். கொண்டை ஊசி வளைவுகளில் திரும்பும்போது வேகம் மிகக் குறைவாக இருக்கட்டும். சாலைகளில் ஈரப்பதம் இருப்பதால் டயர்கள் வழுக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே திடீர் பிரேக் போடுவதைத் தவிர்த்துவிடுங்கள்.. அதேபோல் சமீபத்திய மழையால் மலைச்சரிவுகளில் மண் எப்போது வேண்டுமானாலும் சரிந்துவிழும் அபாயத்துடன் மென்மையாக இருக்கும். எனவே, சாலையோரங்களில் அல்லது சரிவான பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.

அதேபோல் குறுகிய வளைவுகளில் மற்ற வாகனங்களை முந்திச் செல்ல முயற்சிப்பது விபத்திற்கு வழிவகுக்கும். பொறுமை மிக அவசியம் ஆகும். மலைப்பாதையில் சில இடங்களில் செல்போன் சிக்னல் கிடைக்காமல் போய்விடும் வாய்ப்பு அதிகம் எனவே, கிளம்பும் முன்பே உங்கள் இருப்பிடத்தை உறவினர்களுக்குத் தெரிவிப்பது நல்லது.