250 ஆண்டுகளுக்குப் பிறகு கேரள கும்பமேளா கோலாகலம் - சிறப்பு என்ன?
கேரளாவில் 250 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பமேளா நிகழ்வு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 'தென்னிந்தியாவின் கும்பமேளா' என்று அழைக்கப்படும் இந்த விழா, 'தட்சிண கங்கை' என்றும் அழைக்கப்படும் பாரதப்புழா ஆற்றங்கரையில் ஜனவரி 18 அன்று மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கியது.
மலப்புரத்தில் உள்ள திருநவயாவில் உள்ள பாரதபுழா ஆற்றங்கரையில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெறும் இந்த 18 நாள் கும்பமேளாவில் பல்லாயிரக்கணக்கானோர் படித்துறைகளில் புனித நீராடி வருகின்றனர்.
10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் இந்த மாபெரும் கும்பமேளா நிகழ்வுக்கு கேரள தேவசம் துறை அமைச்சர் வி.என்.வாசன் மற்றும் மாதா அமிர்தானந்தமயி ஆகியோர் ஏற்பாடுகளையும், பொருளுதவிகளையும் செய்து வருகின்றனர்.
இந்த கும்பமேளா ஜனவரி 18 அன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரால் தொடங்கி வைக்கப்பட்டது. அவர் அங்கடிபுரம் அலிப்பரம்பா களரியிலிருந்து ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்ட கொடியை ஏற்றினார். ஆளுநர் தனது உரையில், மாநிலத்தில் சனாதன தர்மத்தின் பாரம்பரியம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டதாக பாராட்டினார். அதே நேரத்தில் இது எந்த மதத்திற்கும் எதிராகப் பார்க்கப்படக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வினால் ஒவ்வொரு மாலையும், சூரியன் மறையும் வேளையில், பாரதப்புழா ஆற்றங்கரைகள் ஒளியும் பக்தியும் நிறைந்த ஒரு கண்கொள்ளாக் காட்சியாக மாறுகின்றன. பிரபலமான கங்கை ஆரத்தியை நடத்தும் உத்தரபிரதேசத்தின் காசி விஸ்வநாதர் கோயிலைச் சேர்ந்த அர்ச்சகர்கள், இங்கு "நிலா (பாரதப்புழாவின் மற்றொரு பெயர்) ஆரத்தி" என்று அழைக்கப்படும் நிகழ்வை நடத்துகிறார்கள்.
இந்த விழாவை சிறப்பாக நடத்த 300-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வெடிகுண்டு கண்டறியும் குழுக்கள் நிகழ்விடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. கும்பமேளா நிகழ்விடம் மற்றும் யாகசாலைக்குள் நுழைய முழுமையான சோதனைக்குப் பிறகே அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சிக்காக கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகளை இயக்கி வருகிறது. மேலும், வாரணாசி மற்றும் ரிஷிகேஷில் இருந்து கேரளாவின் எர்ணாகுளத்திற்கு தலா ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
கேரள கும்பமேளா ஏன் நிறுத்தப்பட்டது?
பாரதப்புழா ஆற்றங்கரையில் பாரம்பரியமாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த கும்பமேளா நடைபெற்று வந்தது. மாமாங்கம் என அழைக்கப்பட்ட இந்த விழா, மலபார் ஆங்கிலேயர் வசமானதைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டது.
இது குறித்து விளக்கிய சுவாமி ஆனந்தவனம் பாரதி, "270 ஆண்டுகளுக்கு முன்பு, ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்த நிகழ்வை நிறுத்திவிட்டனர். சுதந்திரத்திற்குப் பிறகு, இந்த பாரம்பரியத்தை மீட்டெடுக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் 2-3 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவை தொடரவில்லை.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்த பாரம்பரியத்தை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவிற்குப் பிறகு இதை ஒரு பெரிய நிகழ்வாக நடத்த உறுதியான முடிவு எடுக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.