வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு! தண்ணீர் புகுந்த பகுதிகளில் எம்பி நேரில் ஆய்வு!

கொட்டக்குடி ஆறு மற்றும் வருசநாடு ஆறு மூலம் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழையால் கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு தொடங்கிய கனமழையானது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகாலை 4 மணி வரை கொட்டி தீர்த்தது.
குறிப்பாக வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, மேகமலை, அரசரடி, பொம்மராஜபுரம், வருசநாடு உள்ளிட்ட சுற்று வட்டார மலைப்பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது.
இதன் காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் கரைபுரண்டு வந்த வெள்ள நீர் தேனி, வருசநாடு சாலையில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. இதன் காரணமாக அந்தப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் தேங்கி இருந்த தண்ணீர் சிறிதளவு வடியத் தொடங்கியதும், வாகனங்கள் தண்ணீருக்குள் மெதுவாக ஊர்ந்து சென்றன. இது தவிர வருசநாடு முதல் கண்டமனூர் வரையிலான வைகை ஆற்றங்கரையோரம் உள்ள பல்வேறு தோட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் விளைநிலங்கள் நீரில் மூழ்கின.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய இரண்டு நாட்களில் வைகை ஆற்றில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், இனி வரும் நாட்களில் மழை அதிகரித்து வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், வைகை ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே போல் போடி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான குரங்கணி, கொட்டகுடி, வடக்கு மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கொட்டகுடி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ள நீர் போடி அருகே உள்ள அணை பிள்ளையார் அணைக்கட்டு தடுப்பணையை கடந்து வைகை அணைக்கு செல்கிறது.
கொட்டக்குடி ஆற்றில் இரு கரைகளையும் தண்ணீர் தாண்டி கரையோரத்தில் உள்ள தோட்டங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. கரையோரங்களில் உள்ள மரங்கள் வெள்ளநீரால் அடித்து வரப்பட்டு அணைக்கட்டு மதகு பகுதிகளை அடைந்துள்ளது. வெள்ளநீர் ஆர்ப்பரித்துக் கொண்டு செல்வதால், பொதுமக்கள் கொட்டுக்குடி ஆற்றில் குளிக்கவும், ஆற்றைக் கடக்க முயற்சிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டுவோ வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில், கம்பம், சுருளிபட்டி போன்ற பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பொதுமக்களிடம் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விசாரித்து பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து அரசு அதிகாரிகளிடம் பேசி உடனடியாக பாதிப்புகள் சரி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.