வங்கதேசத்தில் தொடரும் இந்துக்கள் மீதான தாக்குதல் - மற்றொரு இளைஞர் அடித்துக் கொலை

வங்கதேசத்தில் தொடரும் இந்துக்கள் மீதான தாக்குதல் - மற்றொரு இளைஞர் அடித்துக் கொலை

வங்கதேசத்தில் இந்தியாவை சேர்ந்த திபு சந்திர தாஸ் என்ற இளைஞர் படுகொலையை தொடர்ந்து மற்றொரு இந்து இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வங்கதேசத்தில் வசித்துவந்த இந்து இளைஞரான அம்ரித் மோன்டல் என்கிற சாம்ராட் பணம் பறிக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டை பங்ஷா உபாசிலா மாவட்டத்துக்குட்பட்ட ஹோசென்டங்கா கிராமத்தினர் சுமத்தினர். அதனை தொடர்ந்து இருதரப்பும் இடையே புதன்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தகராறில் கிராமத்தினர் அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் உதவி கண்காணிப்பாளர் தேப்ரதா சர்கார் தலைமையிலான காவல் துறையினர் உயிருக்குப் போராடி கொண்டிருந்த சாம்ராட்டை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று காவல் துறையினர் கூறியதாக வங்கதேசத்தின் பிரபல நாளிதழான 'டெய்லி ஸ்டார்' செய்தி வெளியிட்டிருந்தது.

சம்பவதன்று இரவு, சாம்ராட் தலைமையிலான கும்பல் ஹோசென்டங்கா கிராமத்தில் உள்ள ஷாஹிதுல் என்பவரின் வீட்டிற்கு பணம் வசூலிப்பதற்காக சென்றதாக கிராமவாசிகள் குற்றம்சாட்டினர். அப்போது அந்த வீட்டில் இருந்தவர்கள் திருடர்கள் வந்துவிட்டதாக கூச்சலிடவே, சம்பவ இடத்தில் குவிந்த கிராமவாசிகள் சாம்ராட்டை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பயந்து தலைமறைவான சாம்ராட்டின் கூட்டாளி சலீம் என்பவரை துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் காவல் துறை கைது செய்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்ராட் மீது கொலை வழக்கு உள்ளிட்ட குறைந்தபட்சம் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பங்ஷா காவல் நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொஞ்சம் காலம் தலைமறைவாக இந்த சாம்ராட் அண்மையில் வங்கதேசத்துக்கு திரும்பியதாகவும், அப்போதில் இருந்து அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் உள்ளூர்வாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

முன்னதாக, குறிப்பிட்ட மதத்தை நிந்திப்பது போல் பேசினார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளான, வங்கதேசத்தில் வசித்து வந்த இந்திய இளைஞரான திபு சந்திர தாஸ், மைமென்சிங் மாவட்டத்தில் கடந்த 23-ம் தேதி அடித்துக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நிகழ்ந்த அடுத்தநாளே பணம் பறிப்பு குற்றச்சாட்டில் மற்றொரு இந்து இளைஞரான சாம்ராட் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள நிகழ்வு வங்கதேசத்தில் வசிக்கும் இந்துக்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகப்படுத்தி உள்ளது. அத்துடன் இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்த கேள்வியை சர்வதேச அளவில் எழுப்பி உள்ளது.