பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன: கத்தார் அறிவிப்பு

பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன: கத்தார் அறிவிப்பு

 பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே ஒரு வாரத்துக்கும் மேலாக நடந்த சண்டையில் பலர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் பிரதிநிதிகள் தோஹாவில் தங்களுக்கு இடையேயான மோதலை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் கத்தார் மற்றும் துருக்கி நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட்டனர்.

இதனை தொடர்ந்து, ‘பேச்சுவார்த்தையின் போது, ​​இரு தரப்பினரும் உடனடி போர்நிறுத்தத்துக்கும், இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் வழிமுறைகளை நிறுவுவதற்கும் ஒப்புக்கொண்டனர்’ என்று கத்தார் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் உடனடி நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தும் என்று பாகிஸ்தான் தெரிவித்தது. அதேநேரத்தில், எல்லைப் பகுதிகளில் தாக்குதல்களை நடத்தும் போராளிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஆப்கானிஸ்தான் மறுத்துள்ளது.

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையேயான 48 மணி நேர போர் நிறுத்தம் வெள்ளிக்கிழமை மாலையுடன் காலாவதியானது. இதன் அடுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி தாக்குதல் நடத்தியது.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் இரண்டு மாவட்டங்களில் தாக்குதல்கள் நடந்ததாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஆயுதமேந்திய போராளிகள் மட்டுமே கொல்லப்பட்டனர் என்றும், பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

ஆனால் வான்வழித் தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். பாக்டிகாவில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் பங்கேற்கும் முத்தரப்பு தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் விலகியது