ஆந்திராவில் சோகம்: குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை!

ஆந்திராவில் சோகம்: குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை!

ஆந்திர மாநிலம், கடப்பா ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் முன் பாய்ந்து ஒன்றரை வயது குழந்தை உட்பட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் - மனைவி இடையே தகராறு

கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி ஸ்ரீராமுலு (35) - சிரிஷா (30). இவர்களது மகன் ரித்விக் (1.5 வயது). நேற்று (அக். 12) மாலை ஸ்ரீராமுலு மற்றும் சிரிஷா தம்பதியினருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஸ்ரீராமுலுவின் பாட்டி தலையிட்டு இருவரையும் கடுமையாகத் திட்டியுள்ளார். இதன் காரணமாகக் கோபமடைந்த தம்பதியினர், வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

ரயில் முன் பாய்ந்து தற்கொலை

நேற்று இரவு சுமார் 11 மணியளவில் கடப்பா ரயில் நிலையம் அருகே, தற்கொலை செய்துகொள்ளும் நோக்குடன் ரயில் தண்டவாளத்தில் நின்றிருந்த இந்த மூன்று பேர் மீதும் வேகமாக வந்த சரக்கு ரயில் மோதியுள்ளது. இந்த விபரீதத்தில், அவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

மாரடைப்பால் பாட்டி உயிரிழப்பு

இந்தச் சம்பவத்தைக் கண்ட அப்பகுதியினர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மூன்று பேரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், ஒன்றரை வயது குழந்தை உள்ளிட்ட மூவரும் உயிரிழந்த செய்தியறிந்த அவர்களது பாட்டிக்கு அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டு, அவரும் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எல்லா பிரச்சனைகளுக்கும் தற்கொலை தீர்வல்ல. மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம். மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்).