அப்பல்லோவில் ராமதாஸ்... என்னாச்சு..? அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அப்பல்லோ மருத்துவமனையில் சாதாரண உடல் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அன்புமணி தெரிவித்தார்.
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''இன்று மதுரை, நாளை நெல்லை, அதனை தொடர்ந்து கன்னியாகுமரியில் கட்சி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. நடைபயணத்திற்கு அனுமதி வழங்கவில்லை, ஆனால் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் கூட்டம் நடத்தக் கூடாது, தனியார் இடங்களில் நடத்திக் கொள்ளுங்கள் என நீதிமன்றம் கூறுகிறது. மேலும் எங்களைப் போன்ற கட்சிகள் எல்லாம் மக்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று தான் பரப்புரை மேற்கொள்ள முடியும். அப்போது தான் ஆளும் கட்சி என்னென்ன ஊழல்கள் செய்துள்ளது? என மக்கள் முன் சொல்ல முடியும்' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், 'தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 1,968 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உணவளிக்கும் கடவுளான விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர் என்பது மிகப் பெரிய துயரம். ஒரு விவசாயியும் தற்கொலை செய்து கொள்ள கூடாது என்பது தான் அரசின் கடமையாக இருக்க வேண்டும். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், விவசாயத்துக்கும் எந்த சம்பந்தமே இல்லை. அவருக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து கர்நாடகா அரசுக்கு அதற்குரிய உரிமை உள்ளது என நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. அதன்படி மாநில அரசே கணக்கெடுப்பை நடத்திக் கொள்ளலாம். இந்தியாவில் ஏழு மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து முடித்துவிட்டார்கள், ஆனால் தமிழ்நாட்டில் எடுக்காமல் இருப்பது சமூக அநீதி ஆகும். இதற்குப் பிறகும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மவுனமாக இருப்பது வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாட்டுக்கு அதிகாரம் இல்லை என்று கூறுவது 100% பொய்யாகும். இது சாதி பிரச்சினை அல்ல, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களை அடையாளம் காணும் முயற்சி தான் சாதி வாரியான கணக்கெடுப்பு' என்றார்.
பாமக நிறுவனர் ராமதாஸின் உடல் நிலை குறித்து கேட்ட போது, ''அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சாதாரண உடல் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். முதலமைச்சர் நேரில் சென்று சந்தித்தது நல்லது' என்றார்.