'பராசக்தி பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்' - வெற்றி விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பெருமிதம்

'பராசக்தி பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்' - வெற்றி விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பெருமிதம்

 ''பராசக்தி'' திரைப்படத்தை பார்த்து ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக வாழ்த்தியதோடு, தைரியமாக முயற்சி செய்திருக்கிறீர்கள் என்று பாராட்டியதாக நடிகர் சிவகார்த்திகேயன்தெரிவித்தார்.

பராசக்தி திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி வெளியானது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் பராசக்தி படம் நேற்று வரை ரூ.51 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் அரங்கில் வெற்றி விழா இன்று நடைபெற்றது. விழாவில் படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், கதாநாயகி ஸ்ரீலீலா, நடிகர் அதர்வா முரளி, இயக்குநர் சுதா கொங்காரா ஆகியோருடன் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

கதாநாயகி ஶ்ரீலீலா

இதுவரை என்னுடைய நடனத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் இந்த படத்தில் தான் என்னுடைய நடிப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் இந்த படம் எனக்கு சிறந்த ஏறுமுக படமாக அமைந்துள்ளது. நல்ல துவக்கம் கிடைத்துள்ளது. அதை பயன்படுத்தி வரும் காலத்தில் சிறந்த திரைப்படம் நடிப்பேன் என நம்புகிறேன் என்று கதாநாயகி ஶ்ரீலீலா தெரிவித்தார்.

நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் சுதா கொங்காரா
நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் சுதா கொங்காரா 

‎முதன்முறை சிவா என்னுடைய படத்தில் நடித்ததால் சில பிரச்னைகளை சந்தித்திருக்கலாம். ஆனால் அது முதல் 5, 6 நாட்களில் பழகிவிடுவார்கள். ஷூட்டிங் தாமதமாக வந்தால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு தெரியும். எனக்கு பின்னாடி பேசுவது பிடிக்காது. அதனால் ஒரு நாள் இரவு 12 மணி வரை சிவாவை அழைத்து பேசினேன். அதற்கு பிறகு நாங்கள் பறக்க ஆரம்பித்து விட்டோம். என் கண்களை பார்த்தே அவர் என்னை புரிந்து கொள்வார். படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் அவர்களுடைய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.

ஒரு காட்சி ஒன்றினை காலை ஏழு மணிக்கு நான் ஒருங்கிணைத்தேன். அதில் நடிப்பதற்காக நள்ளிரவு மூன்று முப்பது மணிக்கு இருவர் வந்து விட்டனர். யார் அவர்கள் என்று பார்த்தால் ஒருவர் சிவகார்த்திகேயன். மற்றொருவர் முரளி அதர்வா என்று எனக்கு தெரிய வந்தது. கவர்ச்சியான நடனம் ஆடக்கூடிய நடிகை என்கிற பெயர் ஸ்ரீலீலாவுக்கு இருந்தது. இருப்பினும் இந்தப் படத்தில் நடித்ததன் விளைவாக அவருடைய நடிப்பு திறனை வெகுவாக ரசிகர்கள் பார்த்துள்ளார்கள். ‎நம்ம படம் வெற்றியா? தோல்வியா? என்ற குழப்பம் இருந்தபோது பத்திரிகையாளர்கள் சொன்ன வார்த்தைகள்தான் என்னை முன்னோக்கி நகர வைத்தது என்று இயக்குநர் சுதா கொங்காரா பேசினார்.

நடிகர் சிவகார்த்திகேயன்

தமிழ் உணர்வு இந்த படத்தில் உள்ளது. அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும் என்று எண்ணினேன். அதுவே எனக்கு வாழ்நாள் மகிழ்ச்சியை கொடுத்தது. இதில், ஒரு நடிகராக எனக்கு நடிப்பை அடுத்தக் கட்டத்துக்கு முன்னேற்றத்திற்கு கொண்டு செல்லும் வாய்ப்பாக இருந்தது. உண்மை படமாக இருந்தாலும் இதில் சினிமாவுக்காகவும், வணிகத்திற்காகவும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் உண்மை தன்மை மாறாமல் ஜென்ஜி முதல் அனைவரும் படம் பார்க்க வேண்டும் படத்தின் இறுதியில் முன்பு இப்படியும் இருந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தோம். அது நடந்துள்ளது. ‎நான் இயக்குனரின் நடிகர். அவர் குறிப்பிடும் நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வருவேன்.

இந்த படத்திற்கு அதிகாலை படப்பிடிப்புக்கு வர வேண்டும் என சொன்னார்கள். அது எனது கடமை. அதே போல டாக்டர் திரைப்படத்திற்கு பிறகு நான் நடித்த திரைப்படத்தின் மானிட்டர் பார்க்க மாட்டேன். ஏனெனில் நான் இயக்குநரின் நடிகராக இருக்கிறேன். படத்தின் நல்லது, கெட்டது என அனைத்துமே அவர்களுக்கு நன்றாக தெரியும். அனைத்து முடிவுகளையும் அவர்களிடமே விட்டுவிடுவேன்.

இந்த படத்தை பார்த்து குழந்தை தமிழ் வாழ்க என கூறும் வீடியோ ஒன்றை நான் பார்த்தேன். அதே போல் இந்த போராட்டத்தில் பங்கேற்ற முதியவர் எனக்கு உருக்கமாக வீடியோ அனுப்பி வைத்திருந்தார். இதுவே எங்களது வெற்றி. இதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி. திரைப்படத்தை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக வாழ்த்தினார். தைரியமாக முயற்சி செய்திருக்கிறீர்கள் என்று தெரிவித்தார் என்று நடிகர் சிவகார்த்திகேயன் பேசினார்.