'பிளேயர் ஆஃப் தி மந்த்' விருதுகான பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்த அபிஷேக், குல்தீப், ஸ்மிருதி!

'பிளேயர் ஆஃப் தி மந்த்' விருதுகான பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்த அபிஷேக், குல்தீப், ஸ்மிருதி!

செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் அபிஷேக் சர்மா, குல்தீப் யாதவ், ஸ்மிருதி மந்தனா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்பட்ட 17ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இதன் மூலம் 9ஆவது முறையாக இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றும் சாதித்துள்ளது. இத்தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 7 போட்டிகளில் 314 ரன்களைக் குவித்து தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தினார்.

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர்களைத் தேர்வு செய்து ‘பிளேயர் ஆஃப்தி மந்த்’ விருதை வழங்கி வருகிறது. அந்த வகையில், செப்டம்பர் மாதத்திற்கான பரிந்துரை பட்டியலில் இந்திய அணியின் அபிஷேக் சர்மா, குல்தீப் யாதவ் மற்றும் ஜிம்பாப்வேவில் பிரையன் பென்னட் ஆகியோரது பெயர்களை பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இதில் ஆசிய கோப்பை தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய, இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல உறுதுணையாக இருந்த காரணத்தால் அபிஷேக் சர்மாவின் பெயர் இடம் பிடித்துள்ளது. மறுபக்கம் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டதன் காரணமாக குல்தீப் யாதவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். ஏனெனில் இந்த தொடரில் 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள மற்றொரு வீரர் ஜிம்பாப்வே வீரர் பிரையன் பென்னட். இவர் கடந்த மாதத்தில் மட்டும் 9 டி20 போட்டிகளில் விளையாடி 497 ரன்களைக் குவித்துள்ளார். மேலும் அவரது சராசரி 55.22ஆகும். இதன் காரணமாக அவருக்கும் இந்த பரிந்துரை பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. இதனையடுத்து வாக்கெடுப்பின் அடிப்படையில் யார் ஐசிசியின் சிறந்த வீரர் விருதை வெல்லாவர் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அதேசமயம் செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீராங்கனை பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, பாகிஸ்தானின் சித்ரா அமீன் மற்றும் தென்னாப்பிரிகாவின் தஸ்மின் பிரிட்ஸ் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதில் ஸ்மிருதி மந்தனா கடந்த ஆஸ்திரேலிய தொடரின் போது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் ஒரு அரைசதம், இரண்டு சதங்களையும் விளாசி இருந்தார்.

மேலும் அவர் மொத்தமாக 77 என்ற சராசரியுடன் 308 ரன்களையும் குவித்து அசத்தினார். அதிலும் அவர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் 50 பந்துகளில் சதத்தை விளாசியதும் குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள பாகிஸ்தானின் சித்ரா அமீன், தென்னாப்பிரிக்க தொடரில் இரண்டு சதங்கள், ஒரு அரைசதம் உள்பட 82.76 என்ற சராசரியில் 293 ரன்களைக் குவித்ததன் காரணமாக, அவருக்கு இந்த பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.