தன்னை விட அழகாக இருந்ததால் ஆத்திரம்... சிறுமியை கொலை செய்த பெண்

ஹரியானாவில் திருமண வீட்டில் ஆறு வயது சிறுமியை கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பமாக உறவுக்கார பெண்ணே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னை விட அழகாக இருந்ததால் ஆத்திரம்... சிறுமியை கொலை செய்த பெண்
ஹரியானா மாநிலம் பானிபட் அருகே நவுதலா கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில், 6 வயதான வித்தி என்ற சிறுமி கண்ணை பறிக்கும் அளவிற்கு புசுபுசுவென ஆடையை உடுத்திக் கொண்டு அங்கும் இங்குமாக ஓடியுள்ளார். யார் இந்த சிறுமி என அனைவரும் கேட்கும் வகையில் அவர் துருதுருவென இருந்துள்ளார். கொள்ளை அழகு கொண்ட சிறுமி திடீரென மாயமாகியுள்ளார்.
திருமண வீடு முழுவதும் பெற்றோர் சல்லடை போட்டு தேடிப் பார்த்தும் யாருடைய கண்ணிலும் படவில்லை. கடைசியாக, முதல் தளத்தில் வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டிருந்த அறையை திறந்து பார்த்துள்ளனர். அங்கிருந்த தண்ணீர் வாளிக்குள் முகத்தை விட்டபடி சிறுமி வித்தி, மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளார்.அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஓடியுள்ளனர்.
மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த அதிர்ச்சித் தகவலை கேட்டு கல்யாண வீடே மயான அமைதியில் உறைந்து போயுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. உடனே, கல்யாண வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், சிறுமி கடைசியாக உறவுக்கார பெண்ணான பூனம் என்பவருடன் சென்றது தெரியவந்தது இதையடுத்து, அந்த பெண்ணை பிடித்து விசாரித்ததில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. 34 வயதான பூனத்திற்கு, கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணமானது. இரு குழந்தைகளுக்கு தாயான பின்னரும், தன்னை ஒரு பேரழகியாக நினைத்துக் கொண்டுள்ளார்.
இதனால், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு சென்றால் அனைவரின் பார்வையும் தன் மீதே இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்துள்ளார். இந்த சூழலில் நவுதலா கிராமத்தில் நடைபெற்ற திருமணத்திற்கு மேனா மினுக்கியாக பூனம் சென்றார். அங்கு, 6 வயது சிறுமி வித்தியின் மீதே அனைவரின் பார்வையும் இருந்துள்ளது. அதைக் கண்டு ஆத்திரமடைந்த பூனம், சிறுமியை தனியாக அழைத்துச் சென்று தண்ணீர் வாளியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.
அதிலும், அந்த சிறுமியிடமே வாளியில் தண்ணீர் எடுத்து வரச் சொல்லி ஈவுஇரக்கமின்றி கொன்றுள்ளார். ஏற்கனவே, தன்னுடைய குடும்பத்தில் தன்னை விட வேறு யாரும் அழகாக இருக்க கூடாது என்று அகங்காரத்தில் சுற்றித் திரிந்துள்ளார். இதே மனப்பான்மையில் இருந்தவர் இதற்கு முன்னர் ஏற்கனவே மூன்று பேரை கொலை செய்ததை கேட்டு போலீசாரே, ஆடிப் போயுள்ளனர்.
கடந்த 2023 ஆம் தேதி தன்னைவிட அழகாக இருப்பதாக நினைத்து, மைத்துனியின் 9 வயது மகள் இஷிகாவை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். அதை பார்த்த தனது 4 வயது மகனையும் அதேபோன்று கொலை செய்துள்ளார். பின்னர், கடந்த 2025 ஆம் தேதி 6 வயதான உறவுக்கார சிறுமியும் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆனால், அவர்கள் அனைவரும் எதிர்பாராத விபத்தில் உயிழந்ததாக உறவினர்கள் நினைத்துள்ளனர். இந்த சூழலில், தான் தான் பேரழகி என்ற நினைப்பில் இருந்த பூனம், சீரியல் கில்லராக உலாவியதை அறிந்து ஒட்டுமொத்த குடும்பமும் குலைநடுங்கிப் போயுள்ளது. கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, 6 வயது சிறுமி கொலை வழக்கில் சிக்கிய சைக்கோ, ஏற்கனவே தனது மகன் உட்பட மூன்று பேரை கொலை செய்த சம்பவம் ஹரியானாவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது