பிஹார் தேர்தலில் ஜேஎம்எம் 6 இடங்களில் தனித்துப் போட்டி - மகா கூட்டணியில் பிளவு

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, மகா கூட்டணியில் இருந்து வெளியேறி 6 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
243 உறுப்பினர்களை கொண்ட பிஹார் சட்டப்பேரவையில் உள்ள 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6-ஆம் தேதியும், 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11-ஆம் தேதியும் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முடிவுகள் நவம்பர் 14-ஆம் தேதி அறிவிக்கப்படும். இதில் முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. ஆனாலும், இப்போது வரை மகா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதியாகவில்லை.
மகா கூட்டணியில் ஆர்ஜேடி, காங்கிரஸ், சிபிஐ(எம் எல்), விஐபி கட்சி, சிபிஐ, சிபிஎம், ஜேஎம்எம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதில் எந்தக் கட்சி எந்த தொகுதியில் போட்டியிடும் என்பது உறுதியாகாத காரணத்தால், 8 தொகுதிகளில் மகா கூட்டணி கட்சிகள் தங்களுக்கு இடையிலேயே போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளன. இந்தச் சூழலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, மகா கூட்டணியில் இருந்து வெளியேறி 6 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஜேஎம்எம் பொதுச் செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான சுப்ரியோ பட்டாச்சார்யா, “எங்கள் கட்சி பிஹார் தேர்தலில் தனித்து ஆறு இடங்களில் தனித்து போட்டியிடும். தம்தாஹா, சாகாய், கட்டோரியா, மணிஹரி, ஜமுய் மற்றும் பிர்பைன்டி ஆகிய தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுவோம். எல்லா இடங்களிலும் நிலைமை மாறிவிட்டது. இப்போது காங்கிரஸ் ஏன் ஆர்ஜேடிக்கு எதிராக போட்டியிடுகிறது? இந்திய கம்யூனிஸ்ட் ஏன் விஐபி கட்சிக்கு எதிராக போட்டியிடுகிறது? தேர்தல் உத்திகள் மாறுகின்றன" என்று அவர் கூறினார்.