தவெக சேலம் பிரச்சாரத்திற்கு சிக்கல்? கரூர் துயர சம்பவத்துக்கு பிறகு இடம் தேர்வில் விஜய் முக்கியத்துவம்

தவெக சேலம் பிரச்சாரத்திற்கு சிக்கல்? கரூர் துயர சம்பவத்துக்கு பிறகு இடம் தேர்வில் விஜய் முக்கியத்துவம்

கரூர் துயர சம்பவத்துக்கு பிறகு சேலத்தில் பிரச்சாரத்தை தொடங்க காவல்துறையிடம் அனுமதி கேட்டு தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக சார்பில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு தவெக தனது பிரச்சாரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. அதனை தொடர்ந்து கரூரில் உயிரிழந்த குடும்பத்தினரை நேரில் வரவழைத்த விஜய், கண்ணீர்மல்க அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அதன் பின்னர் விஜய் மீண்டும் கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கரூர் துயர சம்பவம் நடந்து 54 நாட்கள் கழித்து தவெக மீண்டும் பிரச்சார வேளைகளில் இறங்கியுள்ளது.

அதன்படி, தவெக தலைவர் விஜய் தனது அடுத்த பிரச்சாரத்தை சேலத்தில் நடத்த முடிவு செய்துள்ளார். டிசம்பர் 4 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் சேலம் நகர காவல் ஆணையர் அனில் குமார் கிரியிடம் மனு அளித்துள்ளார்.

அந்த பிரச்சாரத்திற்காக மூன்று இடங்களை தவெக தேர்வு செய்துள்ளது. அதன்படி, சேலம் கோட்டை மைதானம், போஸ் மைதானம், சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான திறந்தவெளி மைதானம் ஆகிய மூன்று இடங்களில் ஏதாவது ஒன்றுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை தீபம், டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் அந்த தேதிகளின் பாதுகாப்பு காரணங்களால் காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மாற்று தேதிகளில் அனுமதி கேட்குமாறு காவல்துறை கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தவெக திட்டமிட்டபடி டிசம்பர் 4ம் தேதி அன்று சேலத்தில் பிரச்சாரம் நடத்துமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மேலும், அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இறுதி செய்யப்படும் வரை, மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் பொதுக்கூட்டங்களை நடத்தக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு இணங்க, தவெக தனது அடுத்த பிரச்சாரத்திற்கான இடங்களை மைதானங்களாக பார்த்து தேர்வு செய்துள்ளது.