நிதி நெருக்கடியில் சிக்கிய மெட்ராஸ் பல்கலை: அரசு மானியத்தால் சான்றிதழ்கள் அச்சிடும் பணி தொடக்கம்
/indian-express-tamil/media/media_files/2025/10/11/madras-university-2025-10-11-09-51-25.jpg)
கடந்த 3 ஆண்டுகளாக, நிதிப் பற்றாக்குறை காரணமாக மெட்ராஸ் பல்கலை. அதன் இணைப்புக் கல்லூரி மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் தற்காலிக சான்றிதழ்களை அச்சிட்டு வழங்கவில்லை.
கடந்த 3 ஆண்டுகளாக, மெட்ராஸ் பல்கலைக் கழகம் அதன் இணைப்பு கல்லூரிகளில் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் (Mark Statements), தற்காலிகச் சான்றிதழ்களை (Provisional Certificates) அச்சிட்டு வழங்கவில்லை. இதற்குக் காரணம் ஸ்டேஷனரி வாங்குவதற்கோ, சான்றிதழ்களை அச்சிட்டு விநியோகம் செய்வதற்கோ பல்கலைக்கழகத்திடம் நிதி இல்லை எனக் கூறப்படுகிறது.
உயர்கல்வி தொடர அல்லது வேலைக்கு சேர விரும்பும் மாணவர்கள், தங்கள் தற்காலிகச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியலைப் பெற பல்கலைக்கழகத்தை நேரடியாக அணுக வேண்டியிருந்தது. பெயர் வெளியிட விரும்பாத பல்கலைக் கழக அதிகாரிகள் தெரிவித்த தகவல்படி, உயர்கல்வித் தொடரும் மாணவர்கள், தாங்கள் விண்ணப்பித்த பல்கலைக் கழகத்தின் சேர்க்கை கடிதம் போன்ற ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. அதேபோல், பணியில் சேரும் மாணவர்கள் தங்கள் பணி நியமனக் கடிதத்தின் நகலைச் சமர்ப்பிக்குமாறு கேட்கப்பட்டனர்.
கடந்த சில ஆண்டுகளாகப் பல்கலைக்கழகம் சந்தித்து வரும் கடுமையான நிதி நெருக்கடிக்கு இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு மட்டுமே. இந்த ஆண்டின் தொடக்கத்தில், நிதி நெருக்கடியை சமாளிக்க பல்கலைக்கழகத்தின் பட்ஜெட்டில் பல்வேறு தலைப்புகளின் கீழ் கடுமையான குறைப்பு நடவடிக்கை எடுக்க நிதி குழு அழைப்பு விடுத்திருந்தது. உள்ளூர் நிதித் தணிக்கைத் துறை பல ஆட்சேபனைகளை எழுப்பியதைத் தொடர்ந்து, மாநில அரசின் மானியமும் கிடைக்கவில்லை.
எனினும், தற்போது இந்த நெருக்கடிக்கு தீர்வு கிடைத்துள்ளது. கடந்த மாதம், பல்கலைக்கழகம் மாநில அரசிடமிருந்து கூடுதலாக ரூ.17.84 கோடி மானியமாகப் பெற்றுள்ளது. இது, நிதி நெருக்கடியை ஓரளவுக்கு தணித்துள்ளது. இந்த நிதியின் ஒருபகுதி தற்போது ஸ்டேஷனரி வாங்குவதற்கும், மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் தற்காலிகச் சான்றிதழ்களை அச்சிடுவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.