சென்னையில் பேருந்து நிலையத்தில் வைத்து மனைவியை, கணவனே சுத்தியலால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கொடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சுலோச்சனா. இவர்கள் இருவரும் சென்னையில் போரூர் அடுத்த முகலிவாக்கம் பகுதியில் தங்கி கட்டட வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் சொந்த ஊர் செல்வதற்காக போரூர் சுங்கச்சாவடி பேருந்து நிறுத்தத்தில் ராஜா நின்றிருந்தார். அப்போது அவரது மனைவி சுலோச்சனா வேறொரு நபருடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
அதைக் கண்டு ஆத்திரமடைந்த ராஜா, அங்கேயே வைத்து மனைவியை கண்டித்துள்ளார். அப்போது, இவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியுள்ளது. இதனால் கோபம் கண்ணை மறைந்ததும் ராஜா, தனது பையில் வைத்திருந்த சுத்தியலை எடுத்து மனைவியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். அதில், அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. உடனே, அருகில் இருந்தவர்கள் சுலோச்சனாவுக்கு ஆதரவாக நின்று, அவரின் கணவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
இந்நிலையில், தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் கணவன் – மனைவி இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த சுலோச்சனா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வானகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், கணவன் - மனைவி இருவரும் முகலிவாக்கத்தில் தங்கி நீண்ட நாட்களாக கட்டட வேலை செய்து வந்துள்ளனர்.
அங்கு, சுலோச்சனாவிற்கு வேதநாயகம் என்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் திருமண பந்தத்தை மீறிய உறவாக மாறியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ராஜா, தனது மனைவியை கண்டித்துள்ளார். அதை அவர் பொருட்படுத்தாததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ராஜா பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தபோது, அவரின் மனைவி சுலோச்சனா, வேதநாயகத்துடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
அதைக் கண்டு ஆத்திரம் தலைக்கேறியதும் மனைவியை சுத்தியலால் தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த சுலோச்சனா சிகிச்சை பலன்றி உயிரிழந்ததும், போலீசார் கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர். ராஜா தற்போது மருத்துவமனையில் உள்ளதால், சிகிச்சை முடிந்த பின் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.