இருமல் சிரப்பால் 2 குழந்தைகள் பலி! பாதுகாப்பானது என்பதை நிரூபிக்க அதை குடித்த மருத்துவருக்கு மயக்கம்

இருமல் சிரப்பால் 2 குழந்தைகள் பலி! பாதுகாப்பானது என்பதை நிரூபிக்க அதை குடித்த மருத்துவருக்கு மயக்கம்

ராஜஸ்தானில் இருமல் சிரப் குடித்த இரு குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதனால் பெற்றோர் பதறிய நிலையில், மருந்து பாதுகாப்பானது தான் என்பதை நிரூபிக்க டாக்டரும் அந்த சிரப்பை குடித்துள்ளார். மேலும் 10க்கும் மேற்பட்டோர நோய்வாய்ப்பட்டுள்ளனர்.


டெக்ஸ்ட்ரோமெத்தோர்ஃபன் ஹைட்ரோப்ரோமைடு என்ற இந்த இருமல் சிரப்பை, கேசன் பார்மா என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. கடந்த திங்கட்கிழமை, ஐந்து வயது சிறுவன் ஒருவன் இந்த மருந்தை உட்கொண்ட சில மணி நேரங்களிலேயே உயிரிழந்தார். அதற்குச் சில நாட்களுக்கு முன்பு தான் 2 வயது குழந்தையும் இதே சிரப்பை குடித்து உயிரிழந்திருந்தது. ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் நிதீஷ், இருமல் மற்றும் சளி காரணமாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிராணா சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான். அங்கு மருத்துவர் இருமல் சிரப் ஒன்றைப் பரிந்துரைத்துள்ளனர். அந்த சிறுவனும் இரவு 11:30 மணியளவில் சிரப்பை குடித்துவிட்டுத் தூங்கச் சென்றுள்ளான்.


நடுவில் அதிகாலை 3 மணியளவில் நிதீஷ் ஒருமுறை எழுந்துள்ளான். இரவில் திடீரென இருமல் வந்ததால் சிறுவன் சிரமப்பட்டுள்ளான். இதையடுத்து அவனது தாய் தண்ணீர் கொடுத்து சமாதானம் செய்துள்ளார். பிறகு அவன் மீண்டும் தூங்கிவிட்டான். ஆனால், அதன் பிறகு அவன் மீண்டும் எழுந்திருக்கவில்லை. இதனால் திங்கள் காலையில் பதறிய பெற்றோர், அவனை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அதற்கு முன்பே அச்சிறுவன் உயிரிழந்தான்.

இதே சிரப்பை குடித்த 2 வயது குழந்தையும் கடந்த செப்டம்பர் 22ம் தேதி உயிரிழந்தது. 2 வயதே ஆகியிருந்த சாம்ராட் மற்றும் அவரது சகோதரிகளுக்குக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருமல் மற்றும் சளி ஏற்பட்டது. அவனது தாய் ஜோதி, செப்டம்பர் 22ம் தேதி உள்ளூர் பொது சுகாதார நிலையத்திற்குச் சென்று, கேசன் பார்மா தயாரித்த அதே இருமல் சிரப்பை பெற்றார். ஷாக் சம்பவம் சாம்ராட் மற்றும் அவரது சகோதரிகளுக்கு மதியம் 1:30 மணிக்குத் தாய் சிரப்பை கொடுத்தார். சிரப்பை குடித்துவிட்டுத் தூங்கிய அவர்கள், ஐந்து மணி நேரத்திற்கு மேல் ஆகியும் எழுந்திருக்காததால் குடும்பத்தினர் கவலையடைந்தனர். சகோதரிகள் எழுந்த போதிலும் சாம்ராட் மயக்க நிலையிலேயே இருந்தான். அந்தச் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனில்லாமல் உயிரிழந்தது. இதேபோலத் தான் கடந்த செப்டம்பர் 24ம் தேதி இதே சிரப் குடித்த மற்றொரு 3 வயது ககன் குமார் என்ற குழந்தைக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவனது தாய், சிரப்பை பரிந்துரைத்த டாக்டர் தாராசந்த் யோகியிடம் இது குறித்துக் கேட்டுள்ளார். இருப்பினும், மருந்து பாதுகாப்பானது எனச் சொன்ன தாராசந்த், அதை நிரூபிக்க தானும் ஒரு டோஸ் எடுத்துக்கொண்டார். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராஜேந்திராவுக்கும் கொடுத்தார். 

பின்னர் டாக்டர் தனது காரில் பரத்பூருக்கு புறப்பட்டார். ஆனால் மயக்கம் ஏற்பட்டதால், சாலையின் ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு மயங்கி விழுந்தார். நீண்ட நேரம் அவரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லாததால், அவரது குடும்பத்தினர் செல்போன் மூலம் அவர் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து, மயக்க நிலையில் அவரை மீட்டனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கும் கூட சிரப் குடித்த மூன்று மணி ரத்தில் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இப்படி இருமல் சிரப் குடித்து 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும், 10க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அம்மாநில அரசு அந்நிறுவனத்தின் குறிப்பிட்ட பேட்ஜ் மருந்துகளுக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அந்த இருமல் சிரப் வேறு யாருக்கும் கொடுக்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.