குடும்ப ஆடியன்ஸை கவர்ந்த தனுஷின் இட்லி கடை! - ஓ.டி.டி. ரிலீஸ் எப்போது? முதல் நாளில் லீக்கான தகவல்
கோலிவுட்டின் முக்கியமான மற்றும் பான் இண்டியா நடிகரான தனுஷ், இயக்குநராக மீண்டும் களம் இறங்கியுள்ள திரைப்படம் 'இட்லி கடை'. 'பவர் பாண்டி', 'ராயன்' படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இந்தப் படம், சமீபத்தில் வெளியாகி குடும்பப் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், படம் வெளியான முதல் நாளிலேயே, இதன் ஓ.டி.டி. ரிலீஸ் குறித்த முக்கியத் தகவல் வெளியாகி, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தனுஷ் இயக்கி நடித்துள்ள 'இட்லி கடை' திரைப்படத்தில், நடிகை நித்யா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இயக்குநர் பார்த்திபன் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் போன்ற முன்னணி நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தைத் 'டான் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளதுடன், படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
பழைய கதைக்களம் என்றாலும், அதை இன்றைய தலைமுறைக்கு ஏற்ப உணர்வுபூர்வமாகச் சொன்ன விதத்தால் இந்தப் படம் கவனத்தைப் பெற்றுள்ளது. அன்பான பெற்றோர், குரூரமான வில்லன், பள்ளிப் பருவக் காதல், நேர்மையற்ற போலீஸ் என தமிழ் சினிமாவுக்கே உரித்தான கதாபாத்திரங்களை இந்தப் படத்தில் காணலாம். படத்தின் கதைக்கரு, "இருக்கிறதுக்கு ஆசைப்பட வேண்டும்; பறக்குறதுக்கு ஆசைப்படக் கூடாது" என்ற எளிய உண்மையை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
'இட்லி கடை' படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும், தனுஷின் இந்தக் கதைத்தேர்வையும் இயக்கத்தையும் பாராட்டி வருகின்றனர். ஒரு ரசிகர் பேசும்போது, "தனுஷின் திரைக்கதை இயக்கம் நன்றாக இருந்தது. கதாபாத்திரங்களுக்குக் கொடுக்கப்பட்ட வசனத்தை அவர்கள் சரியாகப் பேசினார்கள். படம் சொல்ல வந்த மெசேஜ் ரொம்ப நல்லா இருக்கு" என்று கூறியுள்ளார்.
மற்றொரு ரசிகர், "கதைக்களம் என்று பார்த்தால் பழைய கதைக்களம் தான். ஆனால், அது இப்போதுள்ள தலைமுறைக்குப் பொருந்துமா என்று கேட்டால், கண்டிப்பாகப் பொருந்தும். நாம் எந்த இடத்திற்குச் சென்றாலும் நம் ஊரை மறக்கக் கூடாது என்று சொல்வார்கள். அதற்கு இந்தப் படம் ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும். அருண் விஜய் கதாபாத்திரம் மிகவும் அருமையாக இருந்தது" என்று பாராட்டியுள்ளார்.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போதே, 'இட்லி கடை' திரைப்படம் ஓ.டி.டி.யில் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஏங்க ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில், இந்தப் படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, 'இட்லி கடை' திரைப்படம் வரும் நவம்பர் மாதம் நெட்ஃப்ளிக்ஸ் (Netflix) ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. இப்படம் திரையரங்குகளில் வெளியானதிலிருந்து நான்கு வாரங்களுக்குப் பிறகு ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்றும், இந்தப் படத்தைப் பெறுவதற்காக நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி. தளம் பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், திரையரங்குகளில் பார்க்க முடியாத ரசிகர்கள், அடுத்த மாதம் வீட்டிலிருந்தபடியே தனுஷின் இந்த உணர்வுபூர்வமான 'ஃபீல் குட்' விருந்தை ரசிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.