அர்ஜூன் தேஷ்வால் அபார ஆட்டம்; பாட்னா பைரேட்ஸை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அசத்தல்!

பாட்னா பைரேட்ஸ் அணிக்கு எதிரான புரோ கபடி லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 56-37 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது.
புரோ கபடி லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்றுன் சென்னை சென்னை பெரியமேட்டில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற 69ஆவது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியின் தொடக்கத்தில் இருந்த தமிழ் தலைவாஸ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளைக் குவித்தது.
அதிலும் குறிப்பாக நட்சத்திர வீரர் அர்ஜூன் தேஷ்வால் ஆரம்பம் முதலே அடுத்தடுத்து புள்ளிகளை கைப்பற்றி அசத்தினார். இதன் காரணமாக முதல் பாதி ஆட்டநேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 19 ரைட் புள்ளிகள், 6 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் மற்றும் ஒரு கூடுதல் புள்ளி என 30 புள்ளிகளை வென்று அசத்தியது. மறுபக்கம் பாட்னா பைரேட்ஸ் அணி டிஃபென்ஸில் கோட்டை விட்டதன் காரணமாக 16 ரைட் புள்ளிகள், ஒரு டேக்கிள் புள்ளி, 2 ஆல் அவுட் என மொத்தமாக 19 புள்ளிகளை மட்டுமே எடுக்க முடிந்தது.
இதன் மூலம் ஆட்டநேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 56-37 என்ற புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி அபாரமான வெற்றியைப் பதிவு செய்தது. இதில் தமிழ் தலைவாஸ் அனியின் அர்ஜூன் தேஷ்வால் 21 ரைடில் 5 கூடுதல் புள்ளிகளுடன் 26 புள்ளிகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த வெற்றியின் மூலம் தமிழ் தலைவாஸ் அணி நடப்பு புரோ கபடி லீக் தொடரின் புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் 7ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
நேற்று நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் தபாங் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பான இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் ஹரியானா ஸ்டீலர் அணி 18 புள்ளிகளையும், தபாங் டெல்லி 17 புள்ளிகளையும் கைப்பற்றினர். பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்திலும் இரு அணிகளும் விட்டுக்கொடுக்காமல் போரடியதன் காரணமாக ஹரியானா அணி 15 புள்ளிகளையும், டெல்லி அணி 16 புள்ளிகளையும் எடுத்தனர்.