இரண்டு நிமிடங்களில் ஆழ்ந்து உறங்க உதவும் இராணுவ ரகசியம்: 'மிலிட்டரி ஸ்லீப் டெக்னிக்' செய்வது எப்படி?

இரண்டு நிமிடங்களில் ஆழ்ந்து உறங்க உதவும் இராணுவ ரகசியம்: 'மிலிட்டரி ஸ்லீப் டெக்னிக்' செய்வது எப்படி?

சமீபகாலமாக, பலரும் இரவில் நிம்மதியான உறக்கத்தைப் பெறுவதற்குச் சிரமப்படுகின்றனர். படுக்கைக்கு சீக்கிரம் சென்றாலும், தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பது, மனதை அலைபாய விடுவது, அல்லது கைப்பேசியைப் பார்ப்பது எனத் தூக்கத்தை வரவழைக்கப் பல வழிகளைக் கையாள்கின்றனர். இன்றைய நவீன உலகில், வேலைப் பளு, மன அழுத்தம், மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் தூக்கமின்மை ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது.

நல்ல தூக்கம் இல்லாவிட்டால் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் பாதிக்கப்படும். இந்நிலையில், விரைவாகவும், ஆழ்ந்தும் தூங்குவதற்குப் பல வழிமுறைகள் பின்பற்றினாலும், அவற்றில் இராணுவ வீரர்கள் கையாண்ட ஒரு எளிய வழி படுத்ததும் ஆழ்ந்த உறக்கத்திற்கு இழுத்து செல்லும் என்றால் நம்ப முடிகிறதா? அவற்றை குறித்து முழுமையாக இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

இரவில் தூங்குவதற்கு உதவும் மிலிட்டரி டெக்னிக் என்றால் என்ன?

சரியான தூக்கம் என்பது மன ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு மிக அவசியம். மன அழுத்தத்தின் காரணமாகவும், ஓயாத சிந்தனைகளாலும் படுக்கையில் படுத்தவுடன் உடனடியாகத் தூங்குவது என்பது பலருக்குச் சவாலாகவே உள்ளது. குறிப்பாக, தீவிரமான மன அழுத்தத்தைக் கையாள வேண்டிய சூழலில் உள்ள இராணுவ வீரர்கள், போர் விமானிகள் போன்றோர், குறுகிய கால அவகாசத்தில் விரைவாகவும், ஆழ்ந்தும் தூங்குவதற்காக உருவாக்கிய ஒரு நுட்பமே 'மிலிட்டரி ஸ்லீப் மெத்தட்' (Military Sleep Method) அல்லது 'இராணுவத் தூக்க முறை' ஆகும் என்கிறது NCBI ஆய்வு.

இந்த உத்தி, உடல் மற்றும் மனம் இரண்டையும் திட்டமிட்டுத் தளர்த்துவதன் மூலம், வெறும் இரண்டு நிமிடங்களுக்குள் தூங்குவதற்கு உதவுகிறது. இது தசைகளைத் தளர்த்துதல், சுவாசத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் மனதை அமைதிப்படுத்துதல் ஆகிய மூன்று முக்கிய படிகளை உள்ளடக்கியது. தொடர்ந்து ஆறு வாரங்களுக்கு இந்த பயிற்சியை பின்பற்றி தூங்குபவர்களில் 96% பேர் இரண்டு நிமிடங்களுக்குள் தூங்கிவிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

மிலிட்டரி டெக்னிக்கை செய்வது எப்படி?

முழு முகத் தளர்வு: முதலில், படுக்கையில் சௌகரியமாக மல்லாந்து படுத்து கண்களை மூடி, முகத்தில் உள்ள ஒவ்வொரு தசையையும் தளர்த்த கவனம் செலுத்தவும். நெற்றியில் ஆரம்பித்து, கன்னங்கள், நாக்கு, தாடை மற்றும் வாயைச் சுற்றியுள்ள தசைகள் வரை படிப்படியாகத் தளர்த்தவும். முகத்திலுள்ள இறுக்கம் நீங்கி, மிருதுவாக மாறுவதை உணர வேண்டும்.

தோள்கள் மற்றும் கைகள் தளர்வு: முகத்தைத் தளர்த்திய பிறகு, கவனத்தை கழுத்து மற்றும் தோள்களுக்குக் கொண்டு செல்லவும். தோள்கள் மற்றும் கைகளில் உள்ள இறுக்கத்தை முழுவதுமாக விடுவித்து, படுக்கையில் அவை ஆழமாகப் புதைவதைப் போல உணரவும். கைகள், முழங்கைகள், முன்கைகள் மற்றும் விரல்கள் வரை இறுக்கம் இல்லாமல் தளர வேண்டும். ஒரு சூடான, தளர்வான உணர்வு கைகளில் பரவுவதை கற்பனை செய்யலாம்.

மார்பு, வயிறு மற்றும் கால்கள் தளர்வு: அடுத்து, மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் கவனம் செலுத்தி, ஆழ்ந்த சுவாசம் மேற்கொள்ளவும். நீங்கள் மூச்சை வெளியேற்றும் போது , மார்பு மற்றும் வயிறுத் தசைகள் மேலும் தளர்வதைக் கவனிக்கவும். பிறகு, கால்கள், தொடைகள், முழங்கால்கள், கணுக்கால்கள் மற்றும் பாதங்கள் வரை முழுவதுமாகத் தளர்த்தவும். உங்கள் உடல் முழுவதும் இறுக்கமின்றி இலகுவாக இருப்பதை உணர வேண்டும்.

மனதை அமைதிப்படுத்துதல்: உடல் முழுவதும் தளர்ந்த பிறகு, மனதை அமைதிப்படுத்துவது மிக முக்கியம். உங்களை அமைதிப்படுத்தும் ஒரு காட்சியை கற்பனை செய்வதில் கவனம் செலுத்தலாம். உதாரணமாக, ஒரு அமைதியான ஏரியில் படகில் படுத்திருப்பது போலவும், மேலே தெளிவான நீல வானம் மட்டுமே தெரிவது போலவும் கற்பனை செய்யலாம். அல்லது, இருண்ட அறையில் கறுப்பு வெல்வெட் தொட்டிலில் படுத்திருப்பது போலக் கற்பனை செய்யலாம்.

வேறு சிந்தனைகள் அல்லது கவலைகள் மனதை ஆக்கிரமிக்கத் தொடங்கினால், உடனே அவற்றைப் புறந்தள்ளிவிட்டு, தொடர்ந்து "சிந்திக்க வேண்டாம்" (Don't Think) என்று மனதிற்குள் பத்து வினாடிகள் மீண்டும் மீண்டும் சொல்லவும். இந்த வார்த்தைகள் கவனத்தைத் தூக்கத்திற்குத் திருப்பிவிடும். இந்த மிலிட்டரி டெக்னிக், முறையான பயிற்சி மூலம் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, இதயத் துடிப்பை மெதுவாக்கி, விரைவாக ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்ல உதவுகிறது.