அண்ணியை கத்தியால் குத்திக்கொலை செய்த நபர்.. மனைவியை தவறாக பேசியதால் ஆத்திரம்

அண்ணியை கத்தியால் குத்திக்கொலை செய்த நபர்.. மனைவியை தவறாக பேசியதால் ஆத்திரம்

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள இருளஞ்சேரி கிராமத்தில் பெண் ஒருவர் குடும்பத் தகராறு காரணமாக கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேரம்பாக்கம் அருகே உள்ள இருளஞ்சேரி கிராமம், கலைஞர் நகரைச் சேர்ந்தவர் இளையராஜா. இவருக்கும் சாந்தி என்பவருக்கும் திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. திருமணத்திற்குப் பிறகு ஒரு வருடம் குழந்தை இல்லாமல் இருந்த நிலையில், பின்னர் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இளையராஜாவின் தம்பி இசைமேகத்திற்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது இசைமேகத்தின் மனைவி கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து சாந்தி அடிக்கடி சாடைப் பேச்சு பேசி வந்ததாகவும், நேற்றும் அதேபோல் இசைமேகத்தின் மனைவி குறித்து சாந்தி பேசினார் என்றும் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த இசைமேகம், தனது அண்ணியான சாந்தியை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து அவரது உடலின் பல இடங்களில் குத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் சம்பவ இடத்திலிருந்து அவர் தப்பி ஓடியுள்ளார்.

கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய சாந்தியை வீட்டில் இருந்த குடும்பத்தினர் உடனடியாக மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி சாந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இசைமேகத்தை தேடி வருகின்றனர்.
குடும்பத் தகராறில் தமது அண்ணியையே இளைஞர் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் இருளஞ்சேரி பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.