ஜிம் செல்லாமல் 8 மாதங்களில் 30 கிலோ எடையை குறைத்த பெண் - எப்படி தெரியுமா?
உடல் எடையை குறைப்பது என்பது கடுமையான உடற்பயிற்சிகளும், பட்டினியும் கலந்த ஒரு போராட்டமாகவே பலராலும் பார்க்கப்படுகிறது. ஆனால், ஊட்டச்சத்து நிபுணர் உதிதா அகர்வால் இந்த பிம்பத்தை உடைத்துள்ளார். ஜிம் செல்லாமல், வெறும் 8 மாதங்களில் 30 கிலோ எடையை அவர் குறைத்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
எந்தவிதமான 'கிராஷ் டயட்' அல்லது விளம்பரப்படுத்தப்படும் 'டிடாக்ஸ்' பானங்களையும் அவர் நாடவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மாறாக, நம்முடைய அன்றாட பழக்கவழக்கங்களில் அவர் செய்த மிகச்சிறிய மாற்றங்களே இந்த மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளன என அவர் பகிர்ந்த டிப்ஸில் இருந்து தெரியவந்துள்ளது.
ஒழுக்கமான வாழ்வியல் முறையும், தொடர் முயற்சியும் இருந்தால் உடல் எடையை குறைப்பது சாத்தியமே என்பதை அவர் நிரூபித்துள்ளார். அந்த வகையில், ஊட்டச்சத்து நிபுணர் உதிதா அகர்வால் பகிர்ந்துள்ள வெயிட் லாஸ் டிப்ஸ்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளாலாம்.
இரவு நேரத்தில் எலுமிச்சை கலந்த வெதுவெதுப்பான நீர்: பலரும் எலுமிச்சை நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பார்கள். ஆனால், உதிதா அதை இரவில் தூங்குவதற்கு முன் குடித்ததாக குறிப்பிட்டுள்ளார். இது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவியதாக தெரிவித்துள்ளர்.
காலையில் வயிறு மிகவும் சென்சிட்டிவ் ஆக இருக்கும் என்பதால், அமிலத்தன்மை ஏற்படாமல் இருக்க அவர் இந்த முறையை தேர்ந்தெடுத்தார். இது காலையில் ஏற்படும் வயிற்று உப்பசத்தைக் குறைக்க உதவும்.
சூரிய மறைவிற்கு பிறகு உப்பு மற்றும் சர்க்கரை தவிர்ப்பு: மாலை 6 மணிக்கு மேல் உணவில் உப்பையும் சர்க்கரையையும் அவர் முழுமையாக தவிர்த்தார். அதிகப்படியான உப்பு உடலில் தேவையற்ற நீரை தங்க வைக்கும் (Water retention), சர்க்கரை இன்சுலின் அளவை உயர்த்தி கொழுப்பு சேர வழிவகுக்கும். இந்த ஒரு மாற்றம் அவர் உடல் வீக்கத்தைக் குறைத்து, காலையில் சுறுசுறுப்பாக உணர வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
காலை உடற்பயிற்சிக்கு பதில் மாலை நேர நடைப்பயிற்சி: உதிதா தன்னை தானே அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்யக் கட்டாயப்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக, தினமும் இரவு உணவிற்குப் பிறகு 20 முதல் 30 நிமிடங்கள் மெதுவாக நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். இது செரிமானத்தை வேகப்படுத்தியதோடு, சோர்வில்லாத ஒரு சுலபமான வழக்கமாக அவருக்கு அமைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இருட்டான அறையில் உறக்கம்: எடை குறைப்பிற்கும் தூக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என பல ஆய்வுகளும் கூறுகின்றன. உதிதா தனது படுக்கையறையை எப்போதும் குளிர்ச்சியாகவும், வெளிச்சம் இல்லாமலும் வைத்துக்கொண்டார். இது கார்டிசோல் மற்றும் லெப்டின் போன்ற ஹார்மோன்களை சீராக வைத்திருக்க உதவியது. முறையான தூக்கம் அவர் உடல் எடையை வேகமாக குறைக்க முக்கியக் காரணமாக இருந்தது.
கார்பனேற்றப்பட்ட பானங்களுக்குத் தடை: டயட் சோடா உள்ளிட்ட அனைத்து விதமான காற்றடைக்கப்பட்ட பானங்களையும் அவர் தவிர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். இத்தகைய பானங்கள் வயிற்றில் வாயுவை உருவாக்கி உப்பசத்தை ஏற்படுத்தும். இவற்றை தவிர்த்தது அவரது செரிமானத்தை சீராக்கி, இடுப்பு சுற்றளவு குறைய உதவியது.
க்ரீன் டீ: பலவிதமான டீகளை குடிக்காமல், அவர் ஒரு நாளைக்கு ஒரு க்ரீன் டீ மட்டுமே குடித்தார். வளர்சிதை மாற்றத்திற்காக (Metabolism) கிரீன் டீ அல்லது செரிமானத்திற்காக இஞ்சி டீ - இதில் ஏதேனும் ஒன்றை மட்டும் இரவு நேரத்தில் பருகினார். இது தேவையற்ற பசியை கட்டுப்படுத்தியது.
சுவரில் கால் நீட்டி ஓய்வெடுத்தல்: தூங்குவதற்கு முன் 10 நிமிடங்கள் சுவற்றின் மேல் கால்களை உயர்த்தி வைத்து படுக்கும் யோகாசனத்தை அவர் செய்தார். இது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, கால்களில் உள்ள நீர் வீக்கத்தைக் குறைத்தது. மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் ஆழ்ந்த உறக்கத்தைப் பெற இது உதவியது.
இரவு உணவிற்குப் பின் எதையும் சாப்பிடக்கூடாது: இரவு 7 மணி முதல் காலை 8 மணி வரை சுமார் 13 மணி நேரம் அவர் 'விரதம்' இருந்தார் (Intermittent Fasting முறை). இரவு உணவிற்கு பின் எந்த நொறுக்குத்தீனியும் சாப்பிடாதது, அவரது உடலுக்குச் செரிமான அமைப்பை சீரமைக்கப் போதுமான நேரத்தை கொடுத்தது. இது அடிவயிற்றுக் கொழுப்பைக் குறைக்க பெரிதும் உதவியதாக குறிப்பிட்டுள்ளார்.
மெக்னீசியம் சப்ளிமெண்ட்: தூக்கம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மெக்னீசியம் சப்ளிமெண்டுகளை அவர் எடுத்துக்கொண்டார். இது சிறந்த தூக்கத்திற்கு வழிவகுத்து உடல் எடை குறைப்புக்கு உதவுவதாக ஆய்வு கூறுகிறது. (குறிப்பு: எந்தவொரு மாத்திரையையும் எடுக்கும் முன் மருத்துவரை அணுகுவது அவசியம்).
இது தவிர்த்து அவரது எடை குறைப்பிற்கு உதவிய 3 டிப்ஸ்களை ஊட்டச்சத்து நிபுணர் உதிதா அகர்வால் பகிர்ந்துள்ளார். அவை,
- தினசரி மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது
- தினமும் இரவு கட்டாயம் 6 மணி நேரம் தூங்குவது
- தினமும் 10k ஸ்டெப்ஸ் நடப்பது. காலை 5k மாலை 5k என பிரித்து நடக்கலாம் என்கிறார்.