துடிக்க துடிக்க அரங்கேறிய கொலைகள்; சிக்கிய சைக்கோ பெண்!

துடிக்க துடிக்க அரங்கேறிய கொலைகள்; சிக்கிய சைக்கோ பெண்!

அழகான குழந்தைகளை குறிவைத்து அடுத்தடுத்து கொலை செய்த சைக்கோ பெண்ணை ஹரியானா போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலைகள் தொடர்பாக அப்பெண் அளித்த வாக்குமூலம் அனைவரையும் திடுக்கிட செய்துள்ளது.

ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தில் உள்ள நெளலதா கிராமத்தில் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திருமண வீட்டுக்கு வந்திருந்த 6 வயது பெண் குழந்தை ஒன்று மாயமானது. அதிர்ச்சியடைந்த உறவினர்கள், வீடு முழுவதும் தேடி பார்த்த போது, வீட்டின் பின்புறத்தில் உள்ள அறையில் வாளி நீரில் மூழ்கி அந்த சிறுமி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. சிறுமி தெரியாமல் வாளியில் விழுந்து இறந்திருக்கலாம் என உறவினர்கள் முதலில் கருதினர்.

தகவலறிந்த போலீசார், அங்கு வந்து விசாரணை மேற்கொண்ட போது, அந்த அறையின் வெளிப்பக்கமாக தாழ் போடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், இதனை கொலை வழக்காக பதிவு செய்தனர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக தனிப்படையும் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. உறவினர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, இறந்த சிறுமிக்கு அத்தை முறையில் உள்ள பெண், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்ற போலீசார் தனது பாணியில் விசாரித்தனர். இதில், சிறுமியை கொலை செய்ததை அப்பெண் ஒப்புக்கொண்டார்.

விஷயம் இத்துடன் முடியவில்லை. அடுத்தடுத்த விசாரணையில், அந்த பெண் அளித்த வாக்குமூலம் போலீசாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனெனில், அவர் இதேபோல 3 குழந்தைகளை கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அவற்றில் ஒன்று அவரது சொந்த குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பானிபட் எஸ்.பி. பூபேந்திர சிங் கூறுகையில், "6 வயது சிறுமியின் கொலை வழக்கை விசாரித்த போது, 3 குழந்தைகளின் கொலை சம்பவங்கள் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இந்த அனைத்து கொலைகளையும் தான் செய்ததாக கைதான பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அழகான பெண் குழந்தைகளை கண்டால் அந்த பெண்ணுக்கு பிடிக்காதாம். அதனால், எப்பொழுது வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்பொழுது அந்த குழந்தைகளை நீரில் மூழ்கடித்து கொலை செய்து விடுவேன் என அப்பெண் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அதிலும், தன் மீது சந்தேகம் வந்துவிட கூடாது என்பதற்காக தனது சொந்த குழந்தையையே (ஆண் குழந்தை) அவர் கொலை செய்திருக்கிறார். மொத்தம் 4 கொலைகளை அவர் செய்திருக்கிறார். இப்போது அந்த பெண்ணை கைது செய்துள்ளோம்" என அவர் கூறினார்.