“விருதுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை… குப்பையில் வீசிவிடுவேன்” - விஷால் ஆவேசம்!

“எனக்கு விருதுகளில் நம்பிக்கை இல்லை. விருதுகள் எல்லாம் பைத்தியக்காரத்தனம். ஒருவேளை நான் விருது வாங்கினால் போகும் வழியிலேயே குப்பைத் தொட்டியில் வீசிவிடுவேன்” என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பாட்காஸ்ட் ஒன்றில் பேசிய அவர், “எனக்கு விருதுகளில் நம்பிக்கை இல்லை. விருதுகள் எல்லாம் பைத்தியக்காரத்தனம். நான்கு பேர் உட்காந்து கொண்டு 8 கோடி பேருக்கு யார் பிடித்த நடிகர், எது பிடித்த படம் என்று முடிவு செய்யும் அளவுக்கு அவர்கள் என்ன மேதாவிகளா? நான் தேசிய விருதுகளையும்தான் சொல்கிறேன். நீங்கள் சர்வே எடுங்கள். மக்கள் சர்வே தான் முக்கியம். இவர்கள் தான் சிறந்த நடிகர் என்று நீங்களே எப்படி முடிவு செய்யமுடியும்? எனக்கு அப்படியான விருதுகளில் நம்பிக்கை கிடையாது. எனக்கு விருது கிடைக்கவில்லை என்பதற்காக நான் இப்படி பேசவில்லை. அதற்கான வரையறைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.
ஒருவேளை நான் விருது வாங்கினால் போகும் வழியிலேயே குப்பைத் தொட்டியில் வீசிவிடுவேன். அது தங்கமாக இருந்தால் அதை அடகு வைத்து அந்த பணத்தை அன்னதானம் செய்து விடுவேன். என்னுடைய புரிதல் இது. இது மற்றவர்களுக்கும் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அவர்களுக்கு விருதுகள் கவுரவமான ஒன்றாக இருக்கலாம்” என்று விஷால் தெரிவித்தார்.
தற்போது ‘மகுடம்’ என்ற படத்தில் விஷால் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பிலேயே நாயகன் விஷால் – இயக்குநர் ரவி அரசு இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் சில காட்சிகளை விஷாலே இயக்கி வந்தார். இதனைத் தொடர்ந்து படத்தில் உள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் பேசி இருவருக்கும் இடையே பிரச்சினையை சரி செய்தார்கள்.
அதற்குப் பின்பும் கூட விஷால் – ரவி அரசு இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறது. இதனால் ‘மகுடம்’ படத்தின் முழு இயக்குநர் பொறுப்பையும் விஷாலே ஏற்றிருக்கிறார். அப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம் என்று மட்டுமே ரவி அரசுவின் பெயர் இடம்பெற இருக்கிறது.