பிரபல கன்னட நடிகர் உமேஷ் காலமானார்

பிரபல கன்னட நடிகர் உமேஷ் காலமானார்

கன்னட திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் உமேஷ் காலமானார். அவருக்கு வயது 80.

கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஐம்பது ஆண்டுகால திரைப் பயணத்தில், 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, கன்னட சினிமாவில், தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் உமேஷ். 1960-ஆம் ஆண்டு வெளியான பி.ஆர்.பந்துலு இயக்கிய ‘மக்களா ராஜ்யா’ படத்தில் அறிமுகமான உமேஷ், தனது அசாத்தியமான நகைச்சுவை திறன், தனித்துவமான உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்புக்காக கன்னட ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டார்.

1975-ஆம் ஆண்டில் வெளியான ‘கதா சங்கமா’ திரைப்படத்திற்காகச் சிறந்த துணை நடிகருக்கான கர்நாடக மாநில விருது இவருக்கு வழங்கப்பட்டது. நகரா ஹோல், குரு சிஷ்யரு, அனுபமா, கமனா பில்லு, அபூர்வ சங்கமா, ஸ்ருதி செரிதாகா, ஷ்ரவண பந்து, மலாயா மருதா உள்ளிட்ட படங்களில் இவரது நகைச்சுவை காட்சிகள் பிரபலம்.

உடல்நலக்குறைவால் தீவிர சிகிச்சை பெற்று வந்தபோதும், மருத்துவமனை படுக்கையில் இருந்தபடியே உமேஷ் நகைச்சுவையாக பேசியும் பாடியும் உடன் இருந்தவர்களையும் கலகலக்க வைத்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகின.

கடந்த அக்டோபர் மாதம், உமேஷ் தனது வீட்டில் உள்ள குளியலறையில் வழுக்கி விழுந்ததால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆரம்பத்தில் கை மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் கன்னட சினிமா ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.