திரைப்படம் தயாரிக்கும் கிராம மக்கள்; கொரோனா கால சம்பவம் படமாகிறது

கேரளாவில் கொரோனா கால சம்பவத்தை மையப்படுத்தி கிராம மக்கள் திரைப்படம் தயாரித்து, மக்களே நடிக்கின்றனர்.
கிராமத்தின் அழகிய வயல்வெளிகள், இயற்கை காட்சிகளை படமாக்கி, கிராமத்தைச் சேர்ந்தவர்களே கதாபாத்திரங்களாக நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு எலப்புள்ளி மற்றும் நெய்தலை பகுதியில் உள்ள வீடுகள், விவசாய நிலங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த திரைப்பட தயாரிப்புக்கு, எலப்புள்ளி பகுதியைச் சேர்ந்தவரும் மலையாள சினிமாவில் இளம் ஒளிப்பதிவாளரும் விவசாயி தனேஷ் ரவீந்திரநாத் மற்றும் அவரது மனைவி அகிலேஷ்வரி ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இவர்களுடைய இரண்டு ஏக்கர் சூரியகாந்தி வயல் மற்றும் செண்டு மல்லி சாகுபடி நிலங்களில் படப்பிடிப்பு நடக்கிறது.
ஒளிப்பதிவாளர் தனேஷ் ரவீந்திரநாத் கூறியதாவது:இந்த திரைப்படத்தில் நடிப்பவர்கள் நடிப்பு பயிற்சியாளர் குமார்தாசின் தலைமையில், ஒரு மாத காலம் பயிற்சி பெற்றுள்ளனர். நெய்தலை பகுதியை சேர்ந்த சிவகுமார் - அனிதா தம்பதியரின் மகனும், அப்புப்பிள்ளையூர் அரசு நடுநிலைப்பள்ளி நான்காம் வகுப்பு மாணவனுமான சனோ படத்தின் கதாநாயகன். கதாநாயகியாக எலப்புள்ளி தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் எனது மகள் தக் ஷரா நடிக்கிறார்.
கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், அப்புப்பிள்ளையூர் அரசு நடுநிலைப்பள்ளியும் மாணவர்கள் திரைப்படத்தின் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதி மனைவி அகிலேஷ்வரி இயக்குகிறார். படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இவ்வாறு, கூறினார்.