தர்மேந்திரா உடல் தகனம் - குடியரசுத்தலைவர், பிரதமர் இரங்கல்; அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நேரில் அஞ்சலி

தர்மேந்திரா உடல் தகனம் - குடியரசுத்தலைவர், பிரதமர் இரங்கல்; அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நேரில் அஞ்சலி

மும்பையில் காலமான நடிகர் தர்மேந்திராவின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா (89). வயது முதிர்வு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த சில வாரங்களாக மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் அவரது உடல் கவலைக்கிடமாக உள்ளதாகவும் இதற்காக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது. இதனை அறிந்து அவருடைய ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இதற்கிடையே நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை சீராக இருப்பதாக அவருடைய மனைவியும் நடிகையும் எம்.பியுமான ஹேமமாலினி கடந்த வாரம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து, நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை தேறியதால் மும்பை தனியார் மருத்துவமனையில் இருந்து சில தினங்களுக்கு முன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இருப்பினும் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்த நடிகர் தர்மேந்திரா இன்று காலமானார். இதை அறிந்து பல்வேறு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் நடிகர் தர்மேந்திரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்த வண்ணம் இருந்தனர். நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், அமிர் கான், சல்மான் கான், தீபிகா படுகோன், அவரது கணவர் ரன்வீர் சிங் உள்ளிட்டோர் தர்மேந்திரா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். இதன் பிறகு மும்பையில் உள்ள பவன் ஹான்ஸ் மயானத்தில் அவரது குடும்பத்தினர் இறுதிச்சடங்குகள் செய்த பிறகு தர்மேந்திராவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

தர்மேந்திராவின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது எக்ஸ் தளப்பக்கத்தில், ''மூத்த நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மேந்திரா மறைவு இந்திய சினிமாவுக்கு பேரிழப்பு. பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வந்த தர்மேந்திரா சிறந்த நடிகராக திகழ்ந்தார்.

இந்திய சினிமாவின் ஒரு உயர்ந்த நபராக, இளம் தலைமுறை கலைஞர்களை தொடர்ந்து ஊக்குவிக்கும் ஒரு பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.'' என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில், ''நடிகர் தர்மேந்திரா ஜியின் மறைவு இந்திய சினிமாவில் ஒரு சகாப்தத்தின் முடிவை காட்டுகிறது. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஏற்றபடி தனது ஆழமான நடிப்பால் ரசிகர்களை வசீகரிக்கும் அற்புதமான நடிகர். இவர் மாறுபட்ட வேடங்களில் நடித்த விதம் எண்ணற்ற மக்களை கவர்ந்தது. அவரது எளிமை, பணிவு மற்றும் அரவணைப்புக்காக என்றென்றைக்கும் போற்றப்படுவார். இந்த சோகமான நேரத்தில் எனது நினைவுகள் முழுவதுமாக நடிகர் தர்மேந்திராவின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுடன் தான் இருக்கிறது. ஓம் சாந்தி." என்று பதிவிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா:

உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளப்பக்கத்தில், "தனது சிறந்த நடிப்பால் 6 தசாப்தங்களாக அனைவரது இதயங்களையும் தொட்ட தர்மேந்திரா ஜியின் மறைவு, இந்திய திரைப்பட உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த தர்மேந்திரா, திரைப்படத் துறையில் தனது அழியாத அடையாளத்தை உருவாக்கினார்.

கலையின் மூலம் அனைத்து வயதினரையும் சேர்ந்த லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை வென்றார். தன்னுடைய நடிப்பின் மூலம் அவர் எப்போதும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பார்.'' என்று பதிவிட்டுள்ளார்.