பிக்பாஸ் சீசன் 9 டைட்டிலை தட்டிச் சென்ற திவ்யா கணேஷ் - மேடையில் கண் கலங்கி சொன்ன வார்த்தை

பிக்பாஸ் சீசன் 9 டைட்டிலை தட்டிச் சென்ற திவ்யா கணேஷ் - மேடையில் கண் கலங்கி சொன்ன வார்த்தை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரன்னர் அப்பாக சபரியும், இரண்டாவது ரன்னர் அப்பாக விக்கல்ஸ் விக்ரமும் தேர்வு செய்யப்பட்டனர்.

தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இதுவரை எந்த சீசன்களிலும் இல்லாத வகையில் யூ டியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் மீடியாக்களில் பிரபலமானவர்களை பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர். இது முதலில் பார்வையாளர்களை அதிருப்தியடைய செய்தாலும், வாட்டர் மெலன் திவாகர் உள்ளிட்டோர் செய்த ரகளைகளால் நிகழ்ச்சி சுவாரசியமானது.

இதன் தொடர்ச்சியாக, வைல்டு கார்டு என்ட்ரி மூலம் திவ்யா கணேஷ், அமித், சாண்ட்ரா, பிரஜன் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தனர். அதன் பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சி மேலும் சூடுபிடித்தது. முன்னதாக, ஆதிரை, கம்ருதீன், கானா வினோத், கெமி, கனி, சபரி, சுபிக்ஷா, அரோரா, நந்தினி, வியானா, அம்ருத், பிரவீன் காந்தி, வி.ஜே. பார்வதி என மொத்தமாக 24 போட்டியாளர்கள் இருந்தனர்.

டை்டடில் வின்னர் திவ்யா

இதில் விக்ரம், திவ்யா, சபரி, அரோரா ஆகிய நான்கு பேரும் பிக்பாஸ் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியிருந்தனர்.‎‎‎ நான்காவது இடத்தை அரோராவும், மூன்றாவது இடத்தை விக்ரமும் தட்டிச் சென்றனர். இறுதியாக, யார் முதலிடம், யார் இரண்டாம் இடம் பிடிப்பார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அதாவது, பிக்பாஸ் டைட்டில் வின்னர் சபரியா?, திவ்யா கணேஷா? என எதிர்பார்த்த நிலையில், தொகுப்பாளர் விஜய் சேதுபதி, அதிக வாக்குகள் பெற்றிருக்கக் கூடிய திவ்யா கணேஷை வெற்றியாளராக அறிவித்தார்.

இதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு மூலமாக நிகழ்ச்சிக்குள்ளே சென்று டைட்டிலை தட்டிச் சென்ற இரண்டாவது நபர் என்கிற பெருமையை திவ்யா கணேஷ் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக ஏழாவது சீசனில் அர்ச்சனா, இதே போல வைல்டு கார்டு மூலமாக வீட்டிற்குள் சென்று டைட்டில் வென்றிருந்தார்.

'வைல்டு கார்டு' என்ட்ரி

பிக்பாஸ் சீசன் 9 தொடங்கி, 28 நாட்கள் கடந்த பிறகே 'வைல்டு கார்டு' மூலமாக வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தார் திவ்யா கணேஷ். அந்த நேரத்தில் பார்வதி, திவாகர் ஆகிய இரண்டு பேர் மீது தான் அனைவரின் பார்வையும் இருந்தது. இருப்பினும், சூழலை முதல் வாரத்திலேயே மாற்றி வீட்டின் தலைவராக திவ்யா கணேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால், கிடைத்த நல்ல பெயரை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் அதற்கு அடுத்த வாரமே சாண்ட்ராவுடன் சேர்ந்து போட்டியாளர்களை வெறுப்பேற்ற தொடங்கினார் திவ்யா. அதையும் தாண்டி, பிக்பாஸையே வெறுப்பேற்றி பலவிதமான பின்னடைவுகளை சந்தித்தார்.

வெற்றிக்கு உதவிய வி.ஜே. பார்வதி

அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட திவ்யா கணேஷ், சாண்ட்ராவுடன் இணைந்து விளையாடுவதை நிறுத்திக் கொண்டு, தனித்துவமாக விளையாட ஆரம்பித்தார். அதிலும் குறிப்பிட்டு சொல்லும் படியாக, கார் டாஸ்க்கில் கம்ருதீன், பார்வதி இருவரும் சாண்ட்ராவை எட்டி உதைத்து கீழே தள்ளிய போது, இரண்டு பேரையும் துணிச்சலோடு எதிர்த்து நின்ற திவ்யாவை மக்கள் அனைவரும் கொண்டாடினார்கள். இதுவே அவரது டைட்டில் வெற்றிக்கும் வழி வகுத்ததாக கூறப்படுகிறது.

பரிசு மழையில் நனைந்த திவ்யா

டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட திவ்யா கணேஷுக்கு பிக்பாஸ் கோப்பை, ரூ.50 லட்சம் ரொக்கம், விக்டோரிஸ் கார் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன. மேலும், நாளொன்றுக்கு ரூ.30,000 வீதம் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த நாளுக்கான ஊதியமும் வழங்கப்பட்டன. மொத்தமாக அவருக்கு ரூ. 70 லட்சம் கிடைத்திருக்கும் என கூறப்படுகிறது.

மேடையில் உருக்கம்

பிக்பாஸ் டைட்டில் கோப்பையை வென்ற திவ்யா கணேஷ் பேசுகையில்,, "பிக்பாஸ் வீட்டில் நான் நானாகவே இருந்தேன். அதனால் தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது என நம்புகிறேன். சின்னத்திரையில் எத்தனையோ வேடங்களை ஏற்றிருக்கிறேன். சில கதாபாத்திரங்களுக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்த்திருக்கிறேன். ஒரு கட்டத்தில், அடுத்தவர்கள் வாங்கும் விருதை தொட்டு பார்க்கலாமா என ஆசை வரும். ஆனால், அப்படி நான் செய்ததில்லை" என கண்கலங்கி பேசினார் திவ்யா.