கரூர் சம்பவம்: விஜயின் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு!

கரூரில் தவெக தலைவர் விஜயின் பிரச்சார வாகனத்தை பின்தொடர்ந்தவர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்பட்ட நிலையில், தற்போது பிரச்சார வாகன ஓட்டுநர் மீது வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி சனிக்கிழமை கரூரில் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதற்காக நாமக்கல்லில் இருந்து கரூர் வரும் வழியில் மாவட்ட எல்லை தவிட்டுப்பாளையம் பகுதியில் விஜய்க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், விஜய் வாகனம் சென்று கொண்டிருந்தபோது, அதற்கு வலதுபுறத்தில் இணையாக இருசக்கர வாகனத்தில் பயணித்து வந்த தவெகவினரின் இரண்டு வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதுவது போல் சென்று தொண்டர்கள் கீழே விழுந்தனர்.
இதில், இரண்டு வாகனத்தில் பயணித்தவர்களும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளானது. தொடர்ந்து, விஜயின் கரூக் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்திற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தவெக மீது கடும் அதிருப்தி தெரிவித்தது. மேலும், விஜயின் பிரச்சார வாகனம், தவிட்டுப்பாளையம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது குறித்தும் நீதிபதி கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திய விஜயின் பிரச்சார வாகனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து, வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
உயர் நீதிமன்ற நீதிபதியின் இந்த கேள்வியை அடுத்து, விஜயின் பரப்புரை வாகன ஓட்டுநர் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஓட்டிச் சென்ற இருவர் மீது, BNS சட்டப் பிரிவு 218 -ன் கீழ் விபத்தை ஏற்படுத்தல், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தல் ஆகிய இரண்டு பிரிவுகளில் கரூர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில், தவெக தலைவர் விஜயின் பிரச்சார வாகனத்தை போலீசார் விரைவில் பறிமுதல் செய்யவுள்ளதாக தெரிகிறது.