’யாவரும் நலம்’ விக்ரம் குமார் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா

விக்ரம் கே குமார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பது உறுதியாகி இருக்கிறது.
‘தேங்க் யூ’ படத்துக்குப் பிறகு நிதின் நடிக்கும் படத்தினை இயக்கவிருந்தார் விக்ரம் கே குமார். ஆனால், அப்படம் பெரும் பொருட்செலவு காரணமாக கைவிடப்பட்டது. இதனால் தனது அடுத்த கதைகளை பல்வேறு நாயகர்களிடம் கூறிவந்தார் விக்ரம் கே குமார். தற்போது அவர் கூறிய கதையொன்று மிகவும் பிடித்திருந்ததால் உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா.
விக்ரம் கே குமார் – விஜய் தேவரகொண்டா இணையும் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. தற்போது ராகுல் சங்கரந்தியான் மற்றும் ரவி கிரண் கோலா ஆகியோரது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் தேவரகொண்டா. இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு விக்ரம் கே குமார் இயக்கும் படத்தில் நடிப்பார் என தெரிகிறது.
தமிழில் ‘யாவரும் நலம்’, ‘24’ ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர் விக்ரம் கே குமார். தெலுங்கில் ‘மனம்’, ’ஹலோ’, ‘கேங்க் லீடர்’ உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கிறார். இறுதியாக ‘தூத்தா’ என்ற வெப் சீரிஸை இயக்கியிருந்தார். இந்த சீரிஸ் பெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.