‘வாரணாசி’ டிஜிட்டல் உரிமை ரூ.1,000 கோடி? ஓடிடி நிறுவனங்கள் கடும் போட்டி
ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் உள்பட பலர் நடிக்கும் படம், ‘வாரணாசி’. ஆக் ஷன் அட்வெஞ்சர் பேன்டஸி படமான இது, 2027-ம் ஆண்டு வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இதன் டிஜிட்டல் உரிமையை வாங்க போட்டி நடப்பதாகக் கூறப்படுகிறது.
ராஜமவுலியின் ‘பாகுபலி 2’ வெளிநாடுகளிலும் வரவேற்பைப் பெற்றது. அவர் இயக்கிய ‘ஆர்ஆர்ஆர்' படத்தின் பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததை அடுத்து ‘வாரணாசி’ படத்துக்குச் சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் பல முன்னணி ஓடிடி தளங்கள் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்க முயன்று வருகின்றன.
ஒரு ஹாலிவுட் படத்துக்கான டிஜிட்டல் உரிமைத் தொகையை கொடுக்க, சில தளங்கள் முன் வந்துள்ளதாகவும் இதன் டிஜிட்டல் உரிமை ரூ.1000 கோடிக்கு விற்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது முடிவானால், ஓர் இந்தியப் படத்தின் சாதனை டிஜிட்டல் விற்பனையாக இது இருக்கும் என்கிறார்கள்.