2 ரயில்கள் மோதி பயங்கர விபத்து: 88 தொழிலாளர்கள் படுகாயம்

2 ரயில்கள் மோதி பயங்கர விபத்து: 88 தொழிலாளர்கள் படுகாயம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 88 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் அருகே சமோலி மாவட்டத்தில் பிபில்கோட்டி நீர்மின் திட்டத்திற்கான சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உத்தரகாண்ட் மாநிலத்தின் மிக முக்கிய திட்டமாக கருதப்படும், விஷ்ணுகாட் - பிபால்கோட்டி நீர் மின் திட்டம் அலகண்டா நதியில், ஹெலங் மற்றும் பிபில்கோட் ஆகிய பகுதிகளுக்கு இடையே அமைக்கப்படுகிறது.

இந்த நீர் மின் திட்டத்தின் மூலம் 444 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், முதற்கட்ட பணிகள் நிறைவடைந்து 111 மெகாவாட் மின்சார உற்பத்தியை அடுத்த ஆண்டு இறுதிக்குள் தொடங்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சுமார் 4.5 கிலோ மீட்டர் தூரம் இதற்காக சுரங்கம் அமைத்துப் பணிகள் நடந்து வரும் நிலையில், நேற்றிரவு இந்த சுரங்கத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "நேற்றிரவு 9 மணிக்கு இரவுப் பணிக்காக தொழிலாளர்கள் ஒரு ரயிலில் சுரங்கத்திற்குள் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே அதே வழித் தடத்தில் கட்டுமானப் பொருட்களை இறக்கி விட்டு ஒரு ரயில் வந்து கொண்டிருந்தது. இரு ரயில்களும் எதிர்பாராத விதமாக மோதிக் கொண்டன" என்று தெரிவித்தனர்.

மேலும், சமோலி மாவட்ட ஆட்சியர் கவுரவ் குமார் கூறுகையில், "தொழிலாளர்கள் சென்ற ரயிலில் 109 பேர் இருந்தனர். உடனடியாக மீட்புப் பணிகள் நடைபெற்றன. காயம் அடைந்த தொழிலாளர்கள் தற்போது தேறி வருகின்றனர்" என்றார்.

விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன், சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம் காயம் அடைந்த தொழிலாளர்கள் மீட்கப்பட்டு கோபேஸ்வர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் பேசிய மாவட்ட ஆட்சியர் கவுரவ் குமார், "இந்த விபத்தில் 88 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். இதில் 70 தொழிலாளர்களுக்கு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் 66 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். எலும்பு முறிவு ஏற்பட்ட 4 தொழிலாளர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பிபால்கோட்டில் உள்ள விவேகானந்தா மருத்துவமனையில் 18 பேருக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களும் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்புவார்கள். காயம் அடைந்தவர்கள் நிலைமை தற்போது பரவாயில்லை" என்றார்.