யு19 உலகக் கோப்பை 2026: வெற்றியுடன் தொடங்கிய இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள்
ஐசிசி யு19 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அமெரிக்காவையும், வெஸ்ட் இண்டீஸ் அணி தன்சானியாவையும் வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளன.
ஐசிசி ஆடவர் யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. புலவாயோவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது.
ஹெனில் படேல் அபாரம்
அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணி வீரர்கள் இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணியில் நிதிஷ் சுதினி 36 ரன்களை சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக அமெரிக்க அணி 35.2 ஓவர்களில் 107 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஹெனில் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் அதிரடி தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 2 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் மழை குறுக்கிட்டதன் காரணமாக போட்டி நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்தியா வெற்றி
பின்னர் மீண்டும் தொடங்கிய போட்டியில் இந்திய அணிக்கு 37 ஓவர்களில் 96 ரன்கள் என்ற இலக்கானது நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் கேப்டன் ஆயுஷ் மாத்ரே 19 ரன்களிலும், வேதந்த் திரிவேதி2 ரன்களிலும், விஹான் மல்ஹோத்ரா 18 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த அபிக்யான் குண்டு மற்றும் கனிஷ்க் சௌகான் இணை சிறப்பாக விளையாடியதுடன் அணியை வெற்றியை நோக்கியும் அழைத்துச் சென்றனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அபிக்யான் குண்டு 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 42 ரன்களையும், கனிஷ்க் சௌகான் 10 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.
இதன் மூலம் இந்திய யு19 அணி 17.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அமெரிக்க யு19 அணியை வீழ்த்தி நடப்பு சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்தியாவின் ஹெனில் படேலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
வெற்றியுடன் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ்
நேற்று நடைபெற்ற மற்றொரு லீக் போட்டியில் குரூப் டி பிரிவில் இடம் பிடித்துள்ள தான்சானியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். விண்ட்ஹோக்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தான்சானியா அணி 34 ஓவர்களில் 122 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக திலன் தக்ரார் 26 ரன்களை சேர்த்த நிலையில் மற்ற வீரர்க்ள் சோபிக்க தவறினர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் விட்டல் லாவ்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்ன இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் டேனெஸ் ஃபிரான்சிஸ் அரைசதம் கடந்து அசத்தினார்.
இதில் டேனெஸ் ஃபிரான்சிஸ் 52 ரன்களையும், ஜூவெல் ஆண்ட்ரூ 44 ரன்களையும் சேர்க்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 21 ஓவர்களில் இலக்கை எட்டியது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தான்சானியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இப்போட்டியில் டேனெஸ் ஃபிரான்சிஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.